வேளாண் பட்ஜெட் குறித்து நாமக்கல் விவசாயிகள் கருத்து
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து உள்ளனர்.
நாமக்கல்:
ஒப்பந்த பண்ணையம்
தமிழக சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
மோகனூர் வாழை விவசாயி அஜீத்தன்:-
வேளாண்மைக்கு தனி பட்ஜெட் என்பது சிறப்பு அம்சம் ஆகும். ஆனால் கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நீட்டிப்பாக தான் உள்ளது. இயற்கை வேளாண்மை, சிறுதானிய உற்பத்தியை பெருக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது. இளைஞர்களை ஈர்ப்பதற்காக டிஜிட்டல் வேளாண்மை, செயலிகள் உருவாகம் காலத்தின் கட்டாயம் என்பதால், அதுவும் வரவேற்க கூடியது. டிரோன் மூலம் பூச்சி மருந்து அடிக்க ஊக்குவித்து இருப்பது நல்ல விஷயம். மொத்தத்தில் விவசாய உற்பத்தியை அதிகரிக்க இந்த பட்ஜெட் ஒரு முன்னோட்டமாக உள்ளது.
இருப்பினும் கடந்த ஆண்டு மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றது. அந்த சட்டங்களுக்கான மாற்று வழி என்ன? என்பது பற்றிய விவரம் இந்த பட்ஜெட்டில் இடம்பெற வில்லை. ஒப்பந்த பண்ணையம் பற்றிய தகவல்களும் இல்லை. அவை இடம்பெற்று இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.
சிறுதானிய சிறப்பு மண்டலம்
பொட்டிரெட்டிப்பட்டி கெஜகோம்பையை சேர்ந்த பெண் விவசாயி ஜானகி:-
பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் விவசாயிகள் பலர் பயன் அடைந்து வருகின்றனர். இந்த பட்ஜெட்டில் பயிர் காப்பீட்டு திட்டத்திற்காக ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இருப்பது வரவேற்கத்தக்கது. சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 2 சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்படும். மாவட்டங்கள் தோறும் சிறுதானிய திருவிழா நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுவும் பாராட்டுக்குரியது.
சூரிய சக்தியை வேளாண் பணிகளுக்கு பயன்படுத்துதல், பண்ணை குட்டைகள் அமைத்தல், ரூ.8 கோடியில் டிஜிட்டர் விவசாயம் அறிமுகம் என்பது உள்ளிட்டவை வேளாண் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.
இயற்கை வேளாண்மை
பரமத்திவேலூர் அனிச்சம்பாளையத்தை சேர்ந்த பெரியசாமி:-
பட்ஜெட்டில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது. இதேபோல் இயற்கை உரங்களை தயாரிக்கும் ஒவ்வொரு குழுவுக்கும் ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
பூச்சிக்கொல்லி பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க 7 உழவர் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும். சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பும் விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.195 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பது போன்ற ஆக்கபூர்வமான அறிவிப்புகள் இடம் பெற்று இருப்பது வரவேற்கத்தக்கது.
மானாவாரி நில தொகுப்புகள்
திருச்செங்கோடு விவசாயி நடேசன்:-
இந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் நலன் சார்ந்த பல நல்ல திட்டங்கள் உள்ளன. குறிப்பாக முதல்-அமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின் சார்பில் ரூ.132 கோடியில் 7 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 3 ஆயிரம் மானாவரி நில தொகுப்புகள் உருவாக்கப்படும். இதன் மூலம் 3 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்திடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே விவசாயிகள் பயன் பெறும் இந்த திட்டத்தை மிகவும் வரவேற்கிறோம். தமிழக விவசாயிகளின் எண்ணங்களை ஈடேற்றும் வகையில் இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டு இருப்பது மிக்க மகிழ்ச்சி. மேலும் அரசின் நலத்திட்டங்கள் கடைக்கோடி விவசாயிக்கும் சென்றடையும் வகையில் முதல்-அமைச்சர் செயல்படுத்துவார் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story