கறம்பக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதல்; வடமாநில வாலிபர் பலி மற்றொருவர் படுகாயம்


கறம்பக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதல்; வடமாநில வாலிபர் பலி மற்றொருவர் படுகாயம்
x
தினத்தந்தி 20 March 2022 12:16 AM IST (Updated: 20 March 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதியதில் வடமாநில வாலிபர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

கறம்பக்குடி:
வடமாநில வாலிபர் பலி
ராஜஸ்தான் மாநிலம் கிங் டவுன் மாவட்டத்தை சேர்ந்தவர் பிஜேந்தர் சிங் (வயது 29). இவரது உறவினர் சுரேஷ் சோக்லி (43). இவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள மோட்டார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை மோட்டார் உதிரி பாகங்கள் விற்பனை தொடர்பாக திருச்சியிலிருந்து பட்டுக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். 
கறம்பக்குடி அருகே உள்ள விளாரிப்பட்டி பிரிவு சாலை அருகே சென்றபோது எதிரே திருவோணம் மூவர் ரோடு பகுதியிலிருந்து விளாரிப்பட்டிக்கு சென்ற சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பிஜேந்தர்சிங் தலையில் பலத்த காயமடைந்து ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். சுரேஷ் சோக்லி படுகாயமடைந்தார்.
விசாரணை 
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் படுகாயமடைந்த சுரேஷ் சோக்லியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான பிஜேந்தர் சிங் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் இச்சம்பவம் குறித்து கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார், சரக்குவேன் டிரைவர் சுரேஷ்குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story