தற்கொலை செய்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்


தற்கொலை செய்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 March 2022 12:31 AM IST (Updated: 20 March 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி தற்கொலை செய்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்:-
ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி தற்கொலை செய்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவன் தற்கொலை
சேலம் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி மஞ்சுளாபள்ளத்தை சேர்ந்தவர் ரத்தினம். இவர் சேலம் அழகாபுரம் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி புஷ்பா. இவர்களுடைய மகன் சஞ்சய் கண்ணன் (வயது 15). அவன் சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளிக்கூடம் முடிந்து அவன் வீட்டுக்கு வந்தான்.
இதையடுத்து சஞ்சய் கண்ணன் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மாணவனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவன் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் நேற்று காலை மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் சஞ்சய் கண்ணனின் உடலை வாங்க மறுத்துவிட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அதைத்தொடர்ந்து உறவினர்கள் திடீரென அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் உதவி கமிஷனர்கள் நாகராஜன், வெங்கடேசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் உறவினர்கள் கூறும் போது, பள்ளியில் ஆசிரியை ஒருவர் கடுமையாக திட்டியதால் தான் மனமுடைந்து  சஞ்சய் கண்ணன் தற்கொலை செய்துள்ளான். எனவே இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
உரிய விசாரணை
இதற்கு அவர்களிடம், மாணவன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்று சஞ்சய் கண்ணனின் உடலை வாங்கி சென்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே மாணவன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கல்வி அதிகாரிகளும் அந்த பள்ளியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story