லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சென்னை வாலிபர் சாவு
சங்ககிரி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் சென்னை வாலிபர் பரிதாபமாக இறந்தார். சுற்றுலா வந்த போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
சங்ககிரி:-
சென்னை பல்லாவரம் சாமிநகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் மாதேஸ் (வயது 22). பி.காம் பட்டபடிப்பு முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி மாதேஸ் தனது நண்பர்கள் முத்து, ரமேஷ்குமார், குட்டி, ரோகித், பார்த்தீபன் ஆகிய 6 பேர் 3 மோட்டார் சைக்கிள்களில் சென்னையில் இருந்து சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் நேற்று முன்தினம் மதியம் ஏற்காட்டில் இருந்து கோவை ஈஷா யோகா மையத்துக்கு சென்றனர். மாதேஸ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளில் பின்னால் பார்த்தீபன் அமர்ந்து இருந்தார்.
சங்ககிரி அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் காளிபட்டி பிரிவு ரோடு மேம்பாலம் மீது முன்னால் சென்று கொண்டிருந்த டாரஸ் லாரி தீடீரென இடது புறமாக ஏறிசென்றதால் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், டாரஸ் லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் மாதேஸ், பார்த்தீபன் ஆகியோர் தூக்கிவீசப்பட்டதில் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாதேஸ் பரிதாபமாக உயிரிழந்தார். பார்த்தீபனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, புதுக்கோட்டையை சேர்ந்த டாரஸ் லாரி டிரைவர் பிரபு (38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-------------
Related Tags :
Next Story