திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கலெக்டர் ஆய்வு
திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கை முன்னிட்டு முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் லலிதா நேற்று ஆய்வு செய்தார்.
திருக்கடையூர்:
திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கை முன்னிட்டு முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் லலிதா நேற்று ஆய்வு செய்தார்.
அமிர்தகடேஸ்வரர் கோவிலில் பாலாலயம்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. மேலும் இந்த கோவில் அபிராமி பட்டராலும், சமய புலவர்கள் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். மேலும் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மணி விழா, சதாபிஷேகம், ஆயுஷ் ஹோமம், ஆயுள் விருத்திக்காக பல்வேறு யாக பூஜைகளும் இங்கு மட்டுமே நடைபெறுகின்றன.
சிறப்பு பெற்ற இந்த கோவிலில் 3 ராஜகோபுரங்கள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாலாலயம் செய்யப்பட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. இதனை தொடர்ந்து திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து கோபுரங்களும், சிற்பங்களும் புதுப்பிக்கும் வகையில் வண்ணங்கள் தீட்டி சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கலெக்டர் ஆய்வு
இன்னும் 7 நாட்கள் இருக்கும் நிலையில் முன்னேற்பாடு பணிகளான சுகாதாரம், சாலைகள் சீரமைப்பு, கழிவறை, குடிநீர், பொதுமக்கள் தங்குவதற்கான இடங்கள், தடையில்லா மின்சாரம் வழங்குவது குறித்து கலெக்டர் லலிதா ஆய்வு மேற்கொண்டு, கோவில் நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் சிவகுமார், சுகாதாரப்பணி துணை இயக்குனர் குமரகுருபரன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் பத்ரிநாராயணன், உதவி ஆணையர் முத்துராமன், குத்தாலம் ஆய்வாளர் ஹரிஹரன், தரங்கம்பாடி தாசில்தார் ஹரிதரன், வட்டார வளர்ச்சி ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் வடிவேல், நிலைய அலுவலர் முருகேசன், சிறப்பு நிலை அலுவலர் அருள்மொழி, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் கோவில் நிர்வாகிகள், அதிகாரிகள் உடனிருந்தனர்.
திருவெண்காடு
சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூம்புகார் ஊராட்சியில் மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் காந்திநகர், முத்தையா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் லலிதா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் கலையரசன், சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சசிகுமார், புஷ்பவல்லி ராஜா, நடராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story