கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட 2 ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும்-ஜவுளி உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை
கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட 2 ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது. இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் மெட்ரோ கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கரூர்,
ஜவுளி உற்பத்தி
வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக கரூர் விளங்கி வருகிறது. இந்திய அரசால் சிறந்த ஏற்றுமதி நகரம் என்ற விருதையும் பெற்றுள்ளது. கரூரில் உள்ள ஜவுளி தொழிலில் நேரடியாக 2 லட்சம் பணியாளர்களுக்கும், மறைமுகமாக 3 லட்சம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இந்த தொழிலில் கிராமப்புறங்களில் இருந்து வரக்கூடிய தொழிலாளர்கள் அதுவும் பெண்கள் அதிகமாக இருக்கின்றனர்.
கரூர் கிராமப்புற பணியாளர்களில் பெரும்பாலானோர், திருச்சியில் இருந்து தொடங்கி கரூர் வரை உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்கள் திருச்சி-ஈரோடு எண்:- 56841 ரெயிலில் வந்து, கரூரில் உள்ள ஜவுளி தொழிலில் (ஏற்றுமதி நிறுவனங்கள், தையல், எம்பிராய்டரி, பிரிண்டிங், டையிங் மற்றும் பினிசிங் யூனிட்கள் உள்ளடக்கிய தொழில் பிரிவில்) பணிபுரியும் பழக்கத்தை வைத்திருந்தனர்.
ரெயில் சேவை நிறுத்தம்
குறிப்பாக பெண்கள் மற்றும் கிராமப்புற பணியாளர்கள் அனைவரும் வீட்டில் இருந்து கரூருக்கு வருவதற்கும், தினமும் வேலை முடிந்து தங்கள் வீடுகளுக்கு ரெயிலில் திரும்புவதற்கும் ரெயில்வண்டி எண்:- 56841 (திருச்சி-ஈரோடு) மற்றும் ரெயில் வண்டி எண்:- 56842 (ஈரோடு-திருச்சி) உபயோகத்தில் இருந்தது. பணிக்கு வருவோருக்கு ரெயில் பயணம் குறைந்த கட்டணத்தில் மிகவும் வசதியாகவும் பயனுள்ளதாகவும் அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும் போக்குவரத்தாக இருந்தது.
கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கொரோனா தொற்று காரணமாக ரெயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.
தொழிலாளர்கள் சிரமம்
இந்த ரெயில்கள் இயக்கப்படாத காரணத்தால் தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலான தொழிலாளர்கள் பஸ்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் ரெயில் பயணம் மிகவும் செலவு குறைந்ததாகவும், நேரத்தை மிச்சப்படுத்துவதாகவும் இருந்தது.
கிராமப்புற தொழிலாளர்களின் நலன் மற்றும் தொழிலாளர்களின் நிலையான வாழ்க்கைக்கு வழிவகுக்க, இயக்காமல் நிறுத்தப்பட்டிருக்கும் இந்த 2 ரெயில்கள் உடனடியாக இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
மீண்டும் இயக்க கோரிக்கை
மேலும் இந்த 2 ரெயில்களின் நேரங்கள் சிறிது மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதும் பொதுமக்களின் வேண்டுகோளாக இருக்கிறது. ரெயில் எண்56841:- காலை 8.30 மணியளவில் கரூர் வந்தும், ரெயில் எண்:- 56842 கரூரில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் வகையிலும் நேரங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
இது வெளியூர் தொழிலாளர்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் மற்றும் ஜவுளி தொழிலில் பணிபுரியும் மற்ற கிராமப்புற வேலை செய்யும் பெண்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் மற்ற தொழில்துறையினரும் பயனடைவார்கள்.
எனவே மேற்கண்ட 2 ரெயில்களின் பயண சேவையை மீண்டும் தொடங்கும் நாளை கரூர் மக்களும், ஜவுளித்துறை தொழிலாளர்களும், தொழில் முனைவோரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story