தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 20 March 2022 1:33 AM IST (Updated: 20 March 2022 1:33 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939278888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு;-

குறுகிய சாலையின் நடுவில் தடுப்புகள்
கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையில் நீதிமன்றம், வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த சாலை ஏற்கனவே குறுகலாக உள்ளது. இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையின் நடுவில் தடுப்புகள் வைக்கப்பட்டன. அதன்பிறகு சாலை மேலும் குறுகலாகி விட்டது. அத்துடன் சாலையில் நடுவில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு மொபட் ஒன்று தடுப்புகளால் விபத்தில் சிக்கி ஒருவர் பலியானார். எனவே இந்த சாலையில் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும். அதன்பிறகு சாலையின் நடுவில் தடுப்புகள் வைத்தால் பயனுள்ளதாக இருக்கும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரவீன், கிருஷ்ணகிரி.
குண்டும், குழியுமான தார்சாலை
தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தையொட்டி வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக அந்த பகுதியில் உள்ள கிடங்கிற்கு தினமும் ஏராளமான சரக்கு லாரிகள் வந்து செல்கின்றன. இந்த சாலையை பொது மக்களும் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். போக்குவரத்து மிகுந்த இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அடிக்கடி சிறு சிறு விபத்துகள் நடக்கின்றன. இருசக்கர வாகனங்களில் சாலையில் பயணிக்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஷ், தர்மபுரி.

சேலம் மாவட்டம் மல்லூரில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் மல்லூரில் இருந்து 1 கி.மீட்டர் தொலைவில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் மழைக்காலங்களில் பழுதடைந்த சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், மல்லூர், சேலம்.
குடிநீர் தட்டுப்பாடு
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் ஆர்.புளியம்பட்டி கிராமம் நொச்சிப்பட்டி காலனியில் 60 குடும்பங்கள் உள்ளன. அந்த பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் மின்மோட்டாருடன் குடிநீர் தொட்டி இல்லை. இதனால் அந்த பகுதியில் போதிய குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க வேண்டும்.
-சீனிவாசன், நொச்சிப்பட்டி, நாமக்கல்.
நிழற்கூடம் அமைக்கப்படுமா?
சேலம் மாவட்டம் செட்டிசாவடி 6-வது வார்டு காந்திநகர் பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் இல்லை. இதனால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் அந்த பகுதியில் நிழற்கூடம் அமைக்க வேண்டும்.
-கார்த்திக், செட்டிசாவடி, சேலம்.
தெருவிளக்கு வேண்டும்
சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட பொன்நகர் நேதாஜி மேற்கு பகுதியில் தெருவிளக்கு இல்லை. இதனால் இரவு நேரங்களில்  அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இரவில் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். இதுபற்றி பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் அந்த பகுதியில் தெருவிளக்கு அமைக்க முன்வர வேண்டும்.
-ஊர்மக்கள், மேட்டூா, சேலம்.
குப்பைகள் அள்ளப்படுமா?
சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் பின்புறம் 15-வது தெருவில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் குப்பைகள் நிரம்பி சாலையில் சிதறிகிடக்கின்றன. குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தினமும் குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க வேண்டும்.
-பிரகாஷ், குகை, சேலம்.
தகனமேடை வேண்டும்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூரில் இறந்தவர்களின் உடல்களை எரிக்க 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மல்லசமுத்திரம் செல்லும் நிலை உள்ளது. இதனால் பெரும் சிரமத்திற்கு பொதுமக்கள் ஆளாகுகின்றனர்.  எனவே வெண்ணந்தூரில் எரிமேடை அமைத்து தர வேண்டும்.
-சிங்காரம், வெண்ணந்தூர், நாமக்கல்.
நோய் பரவும் அபாயம்
சேலம் 33-வது வார்டு தம்பி காளியம்மன் கோவில் தெரு சுகாதாரம் இல்லாமல் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கின்றன. மேலும் குப்பை தொட்டிகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை தினமும் அள்ளாததால் குவிந்து கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அள்ள வேண்டும்.
-ஊர்மக்கள், 33-வது வார்டு, சேலம்.
ஆக்கிரமிக்கப்பட்ட சாலை
சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி பகுதிக்குட்பட்ட அனைத்து தெருக்களிலும் அதிக அளவு ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், தாரமங்கலம், சேலம்

Next Story