மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 20 March 2022 1:36 AM IST (Updated: 20 March 2022 1:36 AM IST)
t-max-icont-min-icon

தவுட்டுப்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

நொய்யல், 
கார் மோதியது
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 39). இவரது மனைவி நாகேஸ்வரி (29). இவர்களுக்கு வர்ஷா (11), தனுஷ்கா (9) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில், வேடசந்தூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு அருணாச்சலம் தனது குடும்பத்தினருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே பாலத்துறை செல்லும் பிரிவு சாலை அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 
4 பேர் படுகாயம்
இந்த விபத்தில் அருணாச் சலம் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 4 பேரையும் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இதையடுத்து, அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய பரமத்திவேலூரை சேர்ந்த முருகேசன் (44) என்பவர் மீது வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story