பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில் தேரோட்டம்
பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை:
பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ராஜகோபால சுவாமி கோவில்
நெல்லை பாளையங்கோட்டையில் வேதநாராயணன்-அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறும். அப்போது, தேரோட்டமும் நடக்கும்.
இந்த கோவில் தேர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பழுதடைந்து ஓடாமல் இருந்தது. இதனால் சிறிய தேரில் சுவாமி வலம் வந்தார். பழுதடைந்த தேரை சரி செய்து தேரோட்டம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அனுமதி பெற்று கோபாலன் கைங்கர்ய சபாவினர் மூலம் பக்தர்களின் ஒத்துழைப்புடன் அழகிய மன்னார் ராஜகோபாலசுவாமி கோவிலுக்கு 36 அடி உயரம், 14 அடி அகலம், 35 டன் எடை கொண்ட புதிய மரத்தேர் அமைக்கப்பட்டது. சக்கரம் 5 அடி உயரம் மற்றும் 5 அடுக்கு வேலைப்பாடுகளுடன் தேர் செய்யப்பட்டுள்ளது. இந்த தேரில் தசாவதார சிற்பங்கள், பன்னிரண்டு ஆழ்வாரின் சிற்பங்கள், கண்ணன் லீலை உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. தேரின் முகப்பில் 4 குதிரை பொம்மைகள் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த தேர் வெள்ளோட்டம் கடந்த மாதம் நடந்தது.
தேரோட்டம்
ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் ராஜகோபால சுவாமி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா வருதல் நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு ராஜகோபால சுவாமி மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. காலை 8.30 மணிக்கு புதிய தேரில் சுவாமி எழுந்தருளினார். 8.40 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் ஜீயர் எம்பெருமானார், நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் டி.பி.சுரேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து தேர் இழுப்பதற்காக பொருத்தப்பட்டுள்ள சங்கிலி வடத்தை பிடித்து பக்தர்கள் இழுத்தனர்.
திரளான பக்தர்கள்
தெற்கு பஜார் வழியாக 4 ரதவீதிகளையும் சுற்றி பகல் 11.40 மணிக்கு நிலையை வந்தடைந்தது. தேரின் முன்பு செண்டை மேளம், நாதஸ்வரம் முழங்க சென்றனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உற்சாகமாக நடனமாடி தேரோட்டத்தை கோலாகலமாக கொண்டாடினார்கள்.
தேரோட்டத்தில் இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையாளர் சங்கர், பாளையங்கோட்டை ஆய்வாளர் பர்வீன் பாபி, ராஜகோபால சுவாமி கோவில் தக்கார் நல்லதாய், செயல் அலுவலர் ராம்குமார், கோபாலன் கைங்கர்ய சபா தலைவர் ராமகிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர்.
பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் தீயணைப்பு துறையினரும் அங்கு முகாமிட்டு இருந்தனர். தேர் ஓடிய சாலைகளில் தேர் கடக்கும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
தேரோட்டத்தையொட்டி மின்சார வாரிய செயற்பொறியாளர் முத்துக்குட்டி உத்தரவின்பேரில் மின்சார வாரிய ஊழியர்கள் தேரோட்டம் நடந்த ரத வீதிகளில் மின் வயர்களை கழட்டி மீண்டும் மாட்டினார்கள்.
Related Tags :
Next Story