வேளாண் பட்ஜெட் கருத்து: ஈரோடு விவசாயிகளின் வரவேற்பும்-எதிர்ப்பும்


வேளாண் பட்ஜெட் கருத்து: ஈரோடு விவசாயிகளின் வரவேற்பும்-எதிர்ப்பும்
x

தமிழக அரசின் வேளாண்மை பட்ஜெட்டுக்கு ஈரோடு மாவட்ட விவசாயிகள் பிரதிநிதிகள் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து உள்ளனர்.

தமிழக அரசின் வேளாண்மை பட்ஜெட்டுக்கு ஈரோடு மாவட்ட விவசாயிகள் பிரதிநிதிகள் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து உள்ளனர்.
பட்ஜெட்
தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை பட்ஜெட்டினை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ள திட்டங்கள் குறித்து பல்வேறு தரப்பினரும் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், தொழில் துறையினர் தங்கள் கருத்துகளை கூறினார்கள்.
சுபி தளபதி
தடப்பள்ளி -அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சபை தலைவர் சுபிதளபதி கூறியதாவது:-
கரும்பு சாகுபடியை அதிகரிக்க பட்ஜெட்டில் ரூ.10 கோடி செலவிடப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்படும் நிலையில் அறிவிக்கப்பட்டு உள்ள தொகையில் கரும்பு உற்பத்தியை அதிகப்படுத்துவது என்பது கேள்விக்குறியாகும்.
விவசாய பணிக்கு ஆள் பற்றாக்குறையை தவிர்க்க பண்ணை எந்திரம் வாங்க ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 90-க்கும் மேற்பட்ட வேளாண் பொறியியல் அலுவலகங்கள் உள்ளன. இவற்றின் நடைமுறை செலவு மட்டும் ஆண்டுக்கு ரூ.500 கோடி ரூபாய்க்கு மேல் ஆகிறது. எனவே தற்போது ஒதுக்கப்பட்டு உள்ள ரூ.250 கோடி என்பது சொற்ப தொகையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
செ.நல்லசாமி
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி கூறியதாவது:-
கள் தடை நீக்கம் குறித்த அறிவிப்பு இடம் பெறவில்லை. இலவச மின்சாரத்துக்காக ரூ.5 ஆயிரத்து 129 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. சம்பள கமிஷன் பரிந்துரையை ஏற்பதுபோல, விவசாய கமிஷன் பரிந்துரைகளை ஏற்றிருந்தால், இந்த நிதி ஒதுக்கீடு தேவை இல்லாமல் இருந்திருக்கும். கரும்பு டன்னுக்கு, 195 ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்திருப்பது வரவேற்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கே.ஆர்.சுதந்திரராசு
தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு கூறியதாவது:-
வேளாண் பிரச்சினைகளை தீர்க்க தலைமை செயலர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்பதை வரவேற்கிறோம். சிறு, குறு விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்று வழங்க ரூ.300 கோடி, இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்வது வரவேற்கத்தக்கது. மின் மோட்டார் வாங்க ரூ.10 ஆயிரம் மானியம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.195 ஊக்கத்தொகை மற்றும் புதிய உழவர் சந்தைகள் அமைக்க நிதி ஒதுக்கியதை வரவேற்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
என்.சிவநேசன்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணை பொது செயலாளர் என்.சிவநேசன் கூறியதாவது:-
மாலை நேர உழவர் சந்தை, சிறுதானியங்கள் விற்பனை விவசாயிகளுக்கும், மக்களுக்கும் பயன் தரும். வேளாண்மையில் சூரிய ஒளி மின் உற்பத்திக்கு நிதியும் உதவியாக இருக்கும். சூரிய ஒளி மூலமான பம்புசெட் அமைக்க ரூ.65 கோடி ஒதுக்கீடு என்பது சிறந்த திட்டமாகும். ஈரோடு மாவட்டத்துக்கு என்று எந்த அறிவிப்புகளும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏ.எம்.முனுசாமி
தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணை தலைவர் ஏ.எம்.முனுசாமி கூறியதாவது:-
விளை பொருளுக்கு விலை நிர்ணயம் செய்வதுடன், பொருளுக்கு உத்தரவாதமான விலை கிடைக்க எந்த திட்டமும் இல்லாதது ஏமாற்றமாகும். பால் விற்பனை விலை குறைப்பால் ஆவினுக்கு ஏற்படும் இழப்புக்கான நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யவில்லை. நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பான கட்டிடங்கள், நெல் இருப்பு வைக்க கிடங்கு வசதி போன்ற அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பி.கே.தெய்வசிகாமணி
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க தலைவர் பி.கே.தெய்வசிகாமணி கூறியதாவது:-
தமிழக அரசின் கடினமான நிலையில் தேர்தல் வாக்குறுதியை 5 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்ய முயலும் வகையில் போடப்பட்டு உள்ள இந்த வேளாண் பட்ஜெட்டை வரவேற்கிறோம். கரும்பு விலையை உயர்த்த வேண்டும். கள் இறக்கும் அனுமதி கொடுத்து இருக்கலாம். 
இவ்வாறு அவர் கூறினார்.
இயற்கை விவசாயி அறச்சலூர் செல்வம் கூறும்போது, ‘தமிழக வேளாண் பட்ஜெட் மிகுந்த திட்டமிடலுடன் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் இதை முழுமையாக செயல்படுத்தினால் மட்டுமே பயன்கள் மக்களுக்கு சென்று சேரும்’ என்றார்.

Next Story