“தேர்தலில் தொடர் வெற்றிகள் தி.மு.க. அரசுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்”-மதுரையில் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை திறந்து வைத்து உதயநிதி ஸ்டாலின் பேச்சு
“தேர்தலில் தொடர் வெற்றிகள் என்பது தி.மு.க. அரசுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்” என்று மதுரையில் நேற்று பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை திறந்துவைத்து உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.
மதுரை,
“தேர்தலில் தொடர் வெற்றிகள் என்பது தி.மு.க. அரசுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்” என்று மதுரையில் நேற்று பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை திறந்துவைத்து உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.
முழு உருவ சிலை
தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டின் பேரில், மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பாக ஆனையூரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார்.
அமைச்சர்கள் மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, மாணிக்கம், பழனியாண்டி, வெங்கடேசன், மாவட்ட செயலாளர்கள் மணிமாறன், பொன்.முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திறந்து வைப்பு
தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பெரும்பிடுகு முத்தரையரின் சிலையை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை என்றாலே மகிழ்ச்சி, அன்பு, பாசம்தான். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை விமான நிலையத்தில் இருந்து வருகின்ற வழி எங்கும் உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். அதற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தமிழக வரலாற்றிலேயே ஒரு பேரரசராக இருந்து, தான்பங்கெடுத்த அனைத்து போரிலும் வெற்றி பெற்றவர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர். அவரது சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இது சிலை திறப்பு விழா மட்டுமல்ல, மக்களுக்கு நன்றி அறிவிக்கும் கூட்டம் என்றும் சொல்லலாம்.
தொடர் வெற்றி
உள்ளாட்சி தேர்தலின் போது மதுரையில் இந்த இடத்தில்தான் பிரசாரத்தை தொடங்கினேன். மக்கள் அமோக வெற்றியை தந்தார்கள். இதற்கு காரணம், தி.மு.க.வின் 10 மாத ஆட்சியும், முதல்-அமைச்சரின் திட்டங்களும்தான். கடந்த 2017-ம் ஆண்டு அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டின் பேரில் மதுரையில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கெடுத்தேன். அதன்பின்தான் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றேன்.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அனைத்து போர்களிலும் வெற்றி பெற்றது போல, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்றம், சட்டசபை, உள்ளாட்சி என அனைத்து தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். 100 சதவீத வெற்றியை தமிழக மக்கள் அளித்து இருக்கிறார்கள். இந்த வெற்றி, தி.மு.க. அரசுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்.
இந்த சிலையை இளைஞரணி செயலாளராகவும், முதல்-அமைச்சரின் மகனாகவும், கலைஞரின் பேரனாகவும், உங்களின் பிரதிநிதியாகவும் இருந்து திறந்து வைத்து இருக்கிறேன். தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், மதுரையில் பெரும்பிடுகு முத்தரையர் சிலை வைக்கப்படும் என்று கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது நானும், அமைச்சர் மூர்த்தியும் வாக்குறுதி கொடுத்து இருந்தோம். அந்த வாக்குறுதியினை தேர்தல் அறிக்கையிலும் சொல்லி இருந்தோம். கடந்த 5 மாதங்களுக்கு முன்பே இந்த சிலை திறப்பதற்கு தயாராக இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக திறக்க முடியவில்லை. எனவே இந்த சிலை திறப்பு உங்களது வெற்றி.
அமைச்சர் மூர்த்தி சாதனை
ஒட்டுமொத்த இந்தியாவே புகழக்கூடிய பட்ஜெட்டை தமிழக அரசு சமர்ப்பித்து இருக்கிறது. கடந்த 9 மாத கால தி.மு.க. ஆட்சியை அனைத்து தலைவர்களும் பாராட்டுகிறார்கள். இந்தியாவிலேயே நம்பர்-1 முதல்-அமைச்சராக நமது முதல்-அமைச்சர் இருக்கிறார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். மதுரைக்கு 2 அமைச்சர்கள் உள்ளனர். அதில் மூர்த்தி, வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு பத்திரப்பதிவு துறையில் ரூ.12 ஆயிரத்து 700 கோடி நிதி வருவாயை அரசுக்கு ஈட்டி சாதனை படைத்து இருக்கிறார்.
தமிழக மக்கள் நமக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுத்து இருக்கிறார்கள் என்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் சொல்லி இருக்கிறார். மக்கள் பிரதிநிதிகள் தி.மு.க.விற்கும், ஆட்சிக்கும் நல்ல பெயர் வாங்கி தர வேண்டும். குறிப்பாக உள்ளாட்சி பிரதிநிதிகள் எந்த தவறான நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. அனைவரும் பொறுப்பை உணர்ந்து மக்கள் பணியை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். முத்தரையர் சமுதாய மக்கள் தொடர்ந்து தி.மு.க.விற்கு ஆதரவளிக்க வேண்டும். நாங்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story