‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 20 March 2022 2:10 AM IST (Updated: 20 March 2022 2:10 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

எரியாத தெருவிளக்கு

 மதுரை குலமங்கலம் மெயின்ரோடு மீனாம்பாள்புரம் பாலம் அருகே உள்ள மின்மாற்றியில் அமைந்துள்ள தெருவிளக்கு பல நாட்களாக எரியாமல் உள்ளது. இருள்சூழ்ந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் இவ்வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். இருட்டை பயன்படுத்தி சமூக விரோதிகளால் திருட்டு சம்பவங்களும் அவ்வபோது நிகழ்ந்து வருகின்றது. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அபுபக்கர், மதுரை.

ஆபத்தான மின்கம்பம்

 விருதுநகர் மாவட்டம் எம்.புதுக்குளம் கிராமத்தில் உள்ள மின்கம்பம் ஒன்று சேதமடைந்து ஆபத்தான  நிலையில்  உள்ளது. புதிய மின்கம்பம் கொண்டுவரப்பட்டும் இன்னும் மாற்றி அமைக்கப்படாமல் உள்ளது. ஆபத்தான மின்கம்பத்தால் மின்விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.  எனவே பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவா, எம்.புதுக்குளம். 

ரேஷன் கடை புதுப்பிக்கப்படுமா?

 ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.காவனூர் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை உள்ளது. பழமை வாய்ந்த இந்த கட்டிடத்தின் மேல்தளம் மோசமாக அமைந்துள்ளது. இதனால் கடைக்கு வரும் பொதுமக்கள் ஒருவித அச்ச உணர்வுடனே வந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடையை புதுப்பிக்க நடவடிக்கை எடுப்பார்களா?.
பாண்டிவேல்பழனி, எஸ்.காவனூர்.

நிழற்குடை தேவை

 மதுரை தெப்பக்குளத்திலிருந்து பெரியார் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் இங்கு வரும் முதியோர்கள், கர்ப்பிணிகள், மாணவர்கள் சிரமப்படுகின்றனர். மேலும் கோடைவெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் நீண்ட நேரம் நிற்க முடியாத நிலை உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
சரவணன், பி.பி.குளம்.

ரேஷன் அரிசி வாங்குவதில் சிக்கல் 

 விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமத்தில் அரசின் சார்பில் முதியோர்களுக்கு வழங்கப்படும்  ரேஷன் அரிசியை அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று வாங்கும் நிலை உள்ளது. இதனால் அதிக தூரம் நடக்க முடியாமல் முதியவர்கள் சிரமப்படுகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முதியோர்களுக்கான இலவச அரிசியை தம்பிபட்டி ரேஷன் கடையில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மாரிமுத்து, தம்பிபட்டி.

போக்குவரத்து நெரிசல்

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் புறவழிச்சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகின்றது. வாகன நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. வாகன ஓட்டிகளின் நலன் கருதி இப்பகுதியில் சீரான போக்குவரத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
ராஜன், ராமநாதபுரம். 

குடிநீர் தட்டுப்பாடு
 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலையில் உள்ளனர். வருமானத்தில் குறிப்பிட்ட தொகை குடிநீருக்கே செலவிடுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகூர், கீழக்கரை.

பயணிகள் சிரமம் 
 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி  பஸ் நிலையத்தின் நுழைவு வாயிலில் உள்ள உயர் ேகாபுர மின் விளக்கு கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.  முதியோர்கள் சிலர் பஸ் நிலையத்தில் உள்ள மேடு, பள்ளம் தெரியாமல்  விழும் நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவக்குமார், உசிலம்பட்டி.

சீரான குடிநீர் வினியோகம்

 விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் 14-வது வார்டு பகுதியில் மாதம் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகின்றது. வழங்கப்படும் குடிநீரும் சில மணி நேரம் மட்டுமே வருகிறது. இதனால் குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மாதத்தின் அனைத்து நாட்களும் குடிநீர் சீராக கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடு்ப்பார்களா?.
 முருகன், விருதுநகர். 

அடிப்படை வசதி ேதவை 

கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் காரைக்குடியில் உள்ள புதிய மற்றும் பழை பஸ்நிலையங்களில் குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே நகராட்சித்துறை சார்பில் பயணிகளுக்கு வேண்டிய குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும்  செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுதா, காரைக்குடி.

நாய்கள் தொல்லை
 விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் நாளுக்கு நாள் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் நாய்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
குணசேகரன், விருதுநகர்.

Next Story