கோடைக்கு முன்பாகவே தர்பூசணி விற்பனை அமோகம்


கோடைக்கு முன்பாகவே தர்பூசணி விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 20 March 2022 2:39 AM IST (Updated: 20 March 2022 2:39 AM IST)
t-max-icont-min-icon

கோடைக்கு முன்பாகவே தர்பூசணி விற்பனை அமோகமாக உள்ளது.

உடையார்பாளையம்;
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் ெவயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பகல் நேரங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க சாலையோரங்களில் உள்ள கடைகளில் தர்பூசணி பழங்களை வாங்கி உண்கின்றனர். இதனால் தர்பூசணி விற்பனை களை கட்டியுள்ளது. குறிப்பாக தத்தனூர் கிராமத்தில் கோடை காலத்துக்கு முன்பாகவே தர்பூசணி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதுகுறித்து தத்தனூர் கிராமத்தை சேர்ந்த தர்பூசணி வியாபாரி முருகேசன் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 1 கிலோ ரூ.15-க்கு தர்பூசணியை கொள்முதல் செய்து, வாடகை வண்டியில் ஏற்றிவந்து தத்தனூர் கிராமத்தில் விற்பனை செய்து வருகிறேன். அளவுக்கேற்ப கிலோ அடிப்படையில் ஒரு தர்பூசணி ரூ.25 முதல் விற்பனை செய்யப்படுகிறது. தர்பூசணியை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். மேலும் கடையில் ஒரு துண்டு தர்பூசணி ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வாங்கி சாப்பிடுகின்றனர், என்றார். மேலும் தர்பூசணியில் உடலுக்கு தேவையான நீர், நார் சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் ஏ மற்றும் சி போன்றவை அதிகம் உள்ளன. தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படக்கூடிய நீர்பற்றாக்குறை ஈடு செய்யப்படும் என்று டாக்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Next Story