தொழிலாளி அடித்துக் கொலை
தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:
சுமை தூக்கும் தொழிலாளி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் காமிட்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி கொளஞ்சியம்மாள். இவர்களுக்கு சுதாகர்(வயது 38) என்ற மகனும், சுதா(35) என்ற மகளும் உண்டு. சுதாவிற்கு திருமணமாகி ஆமணக்கந்தோண்டியில் வசித்து வருகிறார். மகாலிங்கமும், கொளஞ்சியம்மாளும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர்.
சுமை தூக்கும் தொழிலாளியாக சுதாகர் வேலை பார்த்து வந்தார். திருமணமாகாத இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் காமிட்டியம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
ரத்த காயங்களுடன் பிணம்
நேற்று முன்தினம் அவர் வேலை முடிந்து திரும்பியுள்ளார். இந்நிலையில் கல்லாத்தூரில் டாஸ்மாக் கடை அருகே புதிதாக கட்டப்பட்ட அரசு பொது கழிப்பறை முன்புள்ள படிக்கட்டுக்கு கீழ் சுதாகர் தலையில் பலத்த ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். நேற்று அதிகாலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சுதாகர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, அவரது உறவினர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன் தலைமையில் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், சுபா உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு அக்கம், பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சுதாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை
சுதாகர் இறந்து கிடந்த பொது கழிப்பறையின் வாசல் முன்பு பெண்கள் அணியும் ஒரு சட்டை மற்றும் ஒரு சிறிய துணி கிடந்தது. அரியலூரில் இருந்து மோப்ப நாய் டிக்சி வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களையும், பிளவுஸ் மற்றும் சிறிய துணியையும் கைப்பற்றினர். மேலும் சுதாகரின் நெற்றியில் ரத்த காயங்கள் இருந்ததாலும், யாரோ தாக்க வந்ததை தடுக்க முயன்றபோது போல் அவரது இறந்து கிடந்ததாலும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதனால் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமாக எவரேனும் அவரை அடித்து அல்லது வெட்டி கொலை செய்தார்களா? என்பன உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story