திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு இன்று பட்டாபிஷேகம்
திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு இன்று பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டிற்கான பங்குனிப்பெருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சூரசம்ஹார லீலை நடைபெற்றது.
இதனையொட்டி கோபத்தின் அடையாளமாக சிவப்பு நிற வஸ்திரம் மற்றும் சிவப்பு நிற பூமாலை அணிவிக்கப்பட்டு சர்வஅலங்காரத்தில் முருகப்பெருமான் காட்சி தந்தார். மேலும் முருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க நகர்வலம் வந்தார்.
இதே சமயம் வெள்ளை குதிரை வாகனத்தில் முருகப்பெருமானின் போர்படை தளபதி வீரபாகு தேவர் வீதி உலா வந்தார்.இந்த நிலையில் சன்னதி தெருவில் இருமாப்பு கொண்டு சூரபத்மன் வந்தார்.இதற்கிடையில் மேல ரதவீதி, கீழரத வீதி, பெரிய ரதவீதிகளில் எட்டுதிக்குமாக சூரபத்மனை முருகப்பெருமான் தூரத்தினார். இதனை தொடர்ந்து சன்னதி தெருவில் சொக்கநாதர் கோவில் முன்பாக அசுரனான பத்மாசூரனை முருகப்பெருமான் வதம் செய்தார். உடனே அங்கு கூடி இருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் எழுப்பி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
சூரசம்ஹாரலீலையை தொடர்ந்து முருகப்பெருமானுக்கு மகா தீப தூப ஆராதனை நடைபெற்றது. அவை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. திருவிழாவின் விசேஷ விழாவாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணியளவில் கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் எழுந்தருளும் முருகப்பெருமானுக்கு நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோல், தங்க கீரிடம், சேவல் கொடி ஆகியவை சாத்துப்படி செய்யப்பட்டு பட்டாபிஷேகம் நடக்க உள்ளது. இதனையொட்டி அங்கு பக்தர்கள் குவிகிறார்கள்.
Related Tags :
Next Story