சின்ன வளையம் - துளாரங்குறிச்சி சாலை பணி நிறைவடைவது எப்போது?


சின்ன வளையம் - துளாரங்குறிச்சி சாலை பணி நிறைவடைவது எப்போது?
x
தினத்தந்தி 20 March 2022 3:05 AM IST (Updated: 20 March 2022 3:05 AM IST)
t-max-icont-min-icon

சின்ன வளையம் - துளாரங்குறிச்சி சாலை பணி எப்போது நிறைவடையும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஜெயங்கொண்டம்:

4 வழிச்சாலை
திருச்சி-சிதம்பரம் இடையே ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பில் 4 வழிச்சாலை அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி-கல்லகம், கல்லகம்-மீன்சுருட்டி, மீன்சுருட்டி-சிதம்பரம் என 3 பகுதிகளாக சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதில் கீழப்பழுவூர், உடையார்பாளையம், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளை இந்த தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. நெடுஞ்சாலை பணியில் அப்பகுதியில் மேம்பாலம், புறவழிச்சாலை உள்ளிட்டவையும் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
பணியில் தொய்வு
இதில் மீன்சுருட்டி-சிதம்பரம் இடையேயான சாலை பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால் இந்த பணி எப்போது நிறைவடையும் என்று  பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவும் இந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டதாகவும், தற்போது நிலம் முழுமையாக கையகப்படுத்தப்பட்டு விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அப்பகுதிகளில் நெடுஞ்சாலை பணிகளும் தொடங்கப்பட்டு விட்டது. இந்த பணி அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முடிய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தனர்.
2 மாதங்களுக்குள்...
ஜெயங்கொண்டம் சின்ன வளையத்தில் இருந்து பெரியவளையம் வழியாக ஜெயங்கொண்டம்-கும்பகோணம் சாலையை கடக்கும் விதமாக பாலம் அமைப்பது, கரடிகுளம், சூசையப்பர்பட்டினம், சூரியமணல் வழியாக துளாரங்குறிச்சியில் சென்று இணையும் இடத்தில் பாலம் கட்டுவது, சாலைப்பணி உள்ளிட்ட பணிகள் தற்பொழுது நடந்து வருகின்றன. இன்னும் 2 மாதங்களுக்குள் இந்த பணி முழுவதும் நிறைவடையும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Tags :
Next Story