கூடுதல் இருக்கை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்


கூடுதல் இருக்கை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்
x
தினத்தந்தி 20 March 2022 3:07 AM IST (Updated: 20 March 2022 3:07 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பழைய பஸ்நிலையத்தில் கூடுதல் இருக்கை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்;
தஞ்சை பழைய பஸ்நிலையத்தில் கூடுதல் இருக்கை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பழைய பஸ்நிலையம்
தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை பழைய பஸ்நிலையம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த பஸ்நிலையத்தில் 39 பஸ் நிறுத்தங்கள், 49 கடைகள், கழிவறைகள், கண்காணிப்பு அறை, போலீசார் அறை, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த பஸ்நிலையத்தில் இருந்து அம்மாப்பேட்டை, திருக்கருக்காவூர், வெட்டிக்காடு, பாச்சூர், ஒரத்தநாடு, பூதலூர், வடுவூர், புதிய பஸ் நிலையம், மருத்துவக்கல்லூரி, வல்லம் ஆகிய பகுதிகளுக்கு பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மற்றொரு பகுதியில் இருந்து அரியலூர், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம், சென்னை ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.  இதனால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பஸ்நிலையத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது.
இருக்கை வசதி இல்லை
இந்த பஸ் நிலையத்தில் போதிய இருக்கை வசதி இல்லை. குறைந்த அளவிலான இருக்கைகளே அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் நடைபாதையில் நின்று கொண்டும், அதில் அமர்ந்து கொண்டும் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இதனால் முதியவர்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், தஞ்சை பழைய பஸ்நிலையத்தில்  பயணிகளின் வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் போதிய இருக்கை வசதியில்லை. இதனால் பஸ்சுக்காக நீண்ட நேரம் நின்று கொண்டே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக கர்ப்பிணிகள், முதியவர்கள், நிற்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பழைய பஸ்நிலையத்தில் கூடுதல் இருக்கை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாகும்.

Next Story