சிறுபான்மையினருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் முகாம்


சிறுபான்மையினருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் முகாம்
x
தினத்தந்தி 20 March 2022 3:37 AM IST (Updated: 20 March 2022 3:37 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் முகாம் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் முகாம் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. 
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சிறுபான்மையின மக்கள்
குமரி மாவட்டத்தில் சிறுபான்மையின மக்களான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சியர்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் சார்பில் மிகக்குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுகடன், கல்விக்கடன், கறவை மாடுகள் கடன் மற்றும் அனைத்து விதமான சிறுதொழில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கடன்களை பெற விரும்புபவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். விண்ணப்பதாரர்களுடைய ஆண்டு வருமானம் நகர்ப்புறமாக இருந்தால் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாகவும், கிராமபுறமாக இருந்தால் ரூ.98 ஆயிரமாகவும் இருக்க வேண்டும். 
வட்டி விகிதம்
தனி நபர் கடன் திட்டங்களில் வட்டி விகிதம் ஆண்டுக்கு 6 சதவீதம் ஆகும். சுயஉதவி குழுக்கடன் ஆண்டுக்கு 7 சதவீதம், கைவினை கலைஞர்களுக்கு ஆண்டுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம், கல்வி கடன்களுக்கு ஆண்டுக்கு 3 சதவீதம் மட்டுமே வட்டி வசூல் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தினை சிறுபான்மையின மக்கள் அறிந்து, கடன் விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் நடக்கிறது. 
அதன்படி 23-ந் தேதி அகஸ்தீஸ்வரம் தாலுகாவிலும், 24-ந் தேதி தோவாளை தாலுகாவிலும் முகாம் நடக்கிறது. மேலும் கல்குளம் தாலுகாவில் 25-ந் தேதியும், விளவங்கோடு தாலுகாவில் 26-ந் தேதியும்,  திருவட்டார் தாலுகாவில் 28-ந் தேதியும், கிள்ளியூர் தாலுகாவில் 29-ந் தேதியும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடக்கிறது. 
சாதிச்சான்று 
எனவே கடன் தேவைப்படும் சிறுபான்மையின மக்கள் சாதிச்சான்று, வருமானச்சான்று, கூட்டுறவு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பதற்கான வங்கிக்கணக்கு ஆதாரம் உள்ளிட்ட ஆவணங்களுடன் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு விண்ணப்பம் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story