மேடவாக்கத்தில் வாலிபர் அடித்துக்கொலை


மேடவாக்கத்தில் வாலிபர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 20 March 2022 4:10 PM IST (Updated: 20 March 2022 4:10 PM IST)
t-max-icont-min-icon

மேடவாக்கத்தில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

வாலிபர் கொலை

சென்னையை அடுத்த மேடவாக்கம் சாய் நகரைச் சேர்ந்தவர் நந்தகுமார் என்ற நந்தா (வயது 21). பொக்லைன் எந்திரம் டிரைவர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற நந்தா, அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை மேடவாக்கம் பிள்ளையார்கோவில் தெரு ஏரிக்கரையில் நந்தா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த சேலையூர் போலீஸ் உதவி கமிஷனர் முருகேசன், பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் கொலையான நந்தா உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

யார் பெரிய ஆள்?

மேடவாக்கத்தை சேர்ந்த அஜித் (22) என்பவர் மீது கொலை, கஞ்சா, அடிதடி போன்ற வழக்குகள் உள்ளன. அஜித்துக்கும், அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவருக்கும் யார் பெரிய ஆள்? என்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இதனால் சிவாவை பழிதீர்க்க திட்டமிட்ட அஜித், 18-ந்தேதி இரவு சிவாவின் நண்பர்களான கொலையான நந்தா உள்பட 5 பேரை செல்போனில் பேசி மேடவாக்கம் பிள்ளையார்கோவில் தெரு ஏரிக்கரைக்கு வரவழைத்தார். அங்கு அனைவரும் சேர்ந்து மது அருந்தினர். அப்போது அவர்களிடம் சிவாவை கொலை செய்யும் தனது திட்டத்தை அஜித் கூறினார்.

அடித்துக்கொலை

இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தா, செல்போனில் சிவாவை தொடர்பு கொண்டு அஜித்தின் கொலை திட்டம் குறித்து சொல்லி எச்சரித்தார். இதில் ஆத்திரம் அடைந்த அஜித் மற்றும் அவரது நண்பர்கள் ஒன்று சேர்ந்து நந்தாவை சரமாரியாக தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த நந்தா, அதே இடத்தில் பரிதாபமாக இறந்துவிட்டதும், பின்னர் அஜித் உள்பட அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். தப்பி ஓடிய அஜித் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story