நட்புணர்வு கிரிக்கெட் போட்டியில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அணி வெற்றி. 19 ரன்கள் வித்தியாசத்தில் கலெக்டர் அணியை தோற்கடித்தனர்
வேலூரில் நடந்த நட்புணர்வு கிரிக்கெட் போட்டியில் கலெக்டர் தலைமையிலான அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான அணி வெற்றி பெற்றது
வேலூர்
வேலூரில் நடந்த நட்புணர்வு கிரிக்கெட் போட்டியில் கலெக்டர் தலைமையிலான அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான அணி வெற்றி பெற்றது.
நட்புணர்வு கிரிக்கெட் போட்டி
வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினருக்கு இடையே நட்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிரிக்கெட் போட்டி வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில், வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் வருவாய்துறை உள்பட பல்வேறு அரசுத்துறையினர் அடங்கிய 11 பேர் கொண்ட அணியினரும், போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையில் போலீசார் அடங்கிய 11 பேர் கொண்ட அணியினரும் களமிறங்கினர்.
போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக பிரசாத், ராஜேஷ் ஆகியோர் களமிறங்கினர். போலீஸ் சூப்பிரண்டு அணியினர் 15 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக சப்-இன்ஸ்பெக்டர் முத்தரசன் 17 ரன்கள் விளாசினார். போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் 13 ரன்கள் எடுத்தார். கலெக்டர் அணியில் சுபாஷ் 3 விக்கெட்டுகளையும், கலெக்டர் குமாரவேல்பாண்டியன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
போலீஸ் சூப்பிரண்டு அணி வெற்றி
தொடர்ந்து 104 ரன்கள் இலக்குடன் கலெக்டர் அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக வேணுகோபால், குணபதி ஆகியோர் களமிறங்கினார்கள். போலீஸ் அணியின் கட்டுக்கோப்பான பந்து வீச்சினால் 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. போலீஸ் சூப்பிரண்டு அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் கலெக்டர் அணியை தோற்கடித்தது. கலெக்டர் அணியில் சுபாஷ் 28 ரன்களும், கலெக்டர் குமாரவேல்பாண்டியன் 9 ரன்களும் எடுத்தனர்.
போட்டியில் சிறப்பாக விளையாடிய கலெக்டர் அணியை சேர்ந்த சுபாஷ், போலீஸ் சூப்பிரண்டு அணியை சேர்ந்த முத்தரசன் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story