திருப்பூரில் ரூ80 லட்சம் மதிப்பிலான 2 யானைத்தந்தங்களுடன் மூன்று பேரை திருப்பூர் வனத்துறையினர் கைது


திருப்பூரில் ரூ80 லட்சம் மதிப்பிலான 2 யானைத்தந்தங்களுடன் மூன்று பேரை திருப்பூர் வனத்துறையினர் கைது
x
தினத்தந்தி 20 March 2022 6:45 PM IST (Updated: 20 March 2022 6:45 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் ரூ80 லட்சம் மதிப்பிலான 2 யானைத் தந்தங்களுடன் மூன்று பேரை திருப்பூர் வனத்துறையினர் கைது

திருப்பூர்:
திருப்பூரில் ரூ.80 லட்சம் மதிப்பிலான 2 யானைத் தந்தங்களுடன் மூன்று பேரை திருப்பூர் வனத்துறையினர் கைது செய்தனர். வனத்துறையினர் தந்தங்களை விலைக்கு வாங்குவது போல் நடித்து அவர்களிடம் இருந்து தந்தங்களை பறிமுதல் செய்தனர்.
யானை தந்தங்கள் கடத்தல்
திருப்பூர் மாநகர் வெள்ளியங்காடு பகுதியில் யானை தந்தங்களை கடத்தி வந்து விற்பனை செய்வதற்காக 3 பேர் சுற்றித்திரிவதாக திருப்பூர் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து திருப்பூர் வன சரக அதிகாரி செந்தில்குமார் தலைமையில், மத்திய அரசின் வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு குழுவினர் இணைந்து 10 பேர் கொண்ட குழுவினர் வெள்ளியங்காடு பகுதியில் கடந்த 15-ந் தேதி முதல் முகாமிட்டு கண்காணித்தனர்.
சாதாரண உடை அணிந்து, யானை தந்தங்களை விலைக்கு வாங்குவது போல் சென்று சம்பந்தப்பட்ட 3 பேரையும் தொடர்பு கொள்ள திட்டம் தீட்டினர். பின்னர் ஒருவழியாக அவர்களை தொடர்பு கொண்டு தந்தங்களுக்கு விலை பேரம் பேசினார்கள்.
3 பேர் கைது
அதன்பிறகு அவர்களை வரவழைத்து நேற்று முன்தினம் இரவு வெள்ளியங்காடு பகுதியில் வைத்து சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் 3 அடி உயரமுள்ள 2 யானை தந்தங்கள் 4 துண்டுகளாக வெட்டப்பட்டு இருந்தன. அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் வந்த 1 மொபட், 1 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர்கள் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளியான வீரப்பன் (வயது 65), அதே பகுதியை சேர்ந்த முருகன் (45), அவினாசியை சேர்ந்த அவினாசியப்பன் (40) என்பது தெரியவந்தது. முருகன், அவினாசியப்பன் 2 பேரும் பனியன் நிறுவனத்தில் அயர்னிங் மாஸ்டராக வேலை செய்து வந்தது தெரியவந்தது. பின்னர் அவர்கள் 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
ரூ.80 லட்சம் பேரம்
இதுகுறித்து வனசரக அதிகாரி செந்தில்குமார் கூறியதாவது:-
தேனி மாவட்டம் கம்பம் மலைப்பகுதியில் இருந்து நண்பர் ஒருவர் மூலமாக வீரப்பனுக்கு யானை தந்தங்கள் கிடைத்துள்ளது. தந்தத்தை விற்றுக்கொடுத்தால் அதிகப்படியான பணம் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
சுமைதூக்கும் தொழிலாளியான வீரப்பன், அதிகமாக பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். இதற்காக கம்பத்தில் இருந்து பஸ் மூலமாக பையில் வைத்து யானை தந்தம் திருப்பூர் கொண்டு வரப்பட்டுள்ளது.
2 யானை தந்தங்களை வெட்டி 4 துண்டுகளாக, சாதாரண டிராவல் பையில் வைத்து எடுத்து வந்துள்ளனர். வீரப்பன் மட்டும் தனியாக வெள்ளியங்காட்டில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதனால் தந்தங்களை அவர் தனது அறையில் பதுக்கி வைத்துள்ளார்.
நமக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் முகாமிட்டு தொடர்ந்து கண்காணித்து வந்தோம். இதற்காக தந்தத்தை விலைக்கு வாங்குவது போல் வீரப்பனிடம் பேரம் பேசினோம். கடந்த 4 நாட்களாக பின்தொடர்ந்து அதன்பின்னர் ரூ.80 லட்சத்துக்கு விலைபேசி, தந்தங்களை கொடுக்க சம்மதித்தனர்.
தொடர்ந்து விசாரணை
வெள்ளியங்காடு பகுதிக்கு வரவழைத்து 3 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தோம். இவர்களுக்கு தந்தங்களை கொடுத்தது யார்? அந்த  கும்பலுக்கு யானை தந்தங்கள் எப்படி கிடைத்தது? வனப்பகுதியில் வேட்டையாடி யானை தந்தம் எடுக்கப்பட்டதா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.
திருப்பூரில் 2 யானை தந்தங்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story