போக்குவரத்து பணிமனையில் நிறுத்தி இருந்த அரசு பஸ் தானாக நகர்ந்து சுற்றுச்சுவரில் மோதியது


போக்குவரத்து பணிமனையில் நிறுத்தி இருந்த அரசு பஸ் தானாக நகர்ந்து சுற்றுச்சுவரில் மோதியது
x
தினத்தந்தி 20 March 2022 8:06 PM IST (Updated: 20 March 2022 8:06 PM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து பணிமனையில் நிறுத்தி இருந்த பஸ் தானாக நகர்ந்து சுற்றுச்சுவரில் மோதி நின்றது. இதை கண்டித்து கட்டிட உரிமையாளர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோத்தகிரி

போக்குவரத்து பணிமனையில் நிறுத்தி இருந்த பஸ் தானாக நகர்ந்து சுற்றுச்சுவரில் மோதி நின்றது. இதை கண்டித்து கட்டிட உரிமையாளர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

போக்குவரத்து பணிமனை

கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இதை ஒட்டி தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் வங்கி, துரித உணவகம், பேக்கரி, டீ கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. 

எனவே இந்த பகுதியில் எப்போதுமே மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கம். இதன் அருகே இருக்கும் போக்குவரத்து பணிமனைக்கு அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்படும். 

அதுபோன்று ஷிப்ட் மாறும் டிரைவர், கண்டக்டர்கள் இங்கு வந்து கையெழுத்து போட்டு பணிக்கு செல்வது உண்டு.

தானாக நகர்ந்த பஸ்

இந்த நிலையில் காலை 11 மணிக்கு அரசு பஸ்சுக்கு டீசல் நிரப்ப டிரைவர் இந்த பணிமனைக்கு வந்தார். பின்னர் அவர் அங்கு பஸ்சை நிறுத்திவிட்டு அலுவலகத்துக்குள் சென்றார். 

அப்போது அந்த பஸ் திடீரென்று தாழ்வான பகுதியை நோக்கி தானாகவே நகர்ந்து சென்றது. இதை பார்த்ததும் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 உடனே அவர்கள் பஸ்சை நோக்கி ஓடி வந்து அந்த பஸ்சை நிறுத்த முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த பஸ் இந்த பணிமனையின் அருகே இருந்த தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தின் தடுப்புச்சுவர் மீது மோதி நின்றது. 

உரிமையாளர் போராட்டம்

இதில் பஸ்சின் முன்பகுதி சேதம் அடைந்ததுடன், தடுப்புச்சுவரும் இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் அங்கு பொதுமக்கள் யாரும் இல்லாததால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை. 

இது குறித்து தகவல் அறிந்த கட்டிட உரிமையாளர் உடனடியாக அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கட்டிட உரிமையாளரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

அதில் இடிந்த கட்டிட சுற்றுச்சுவர், போக்குவரத்து பணிமனை சார்பில் கட்டிக்கொடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார். 

போலீசாா் விசாரணை

மேலும் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், டிரைவர் பஸ்சை ஆப் செய்து கியரில் நிறுத்தி உள்ளார். ஆனால் கியர் ரிலீஸ் ஆகியதால் அந்த பஸ் தானாக நகர்ந்து தடுப்புச்சுவரில் மோதியது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 


Next Story