ராணிப்பேட்டை மாவட்டத்தில் 24,980 பேருக்கு 5 பவுன் நகைக் கடன் தள்ளுபடி. அமைச்சர் ஆர்.காந்தி ஆணை வழங்கினார்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 24,980 பேருக்கு 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆணையை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 24,980 பேருக்கு 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆணையை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
24,980 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் சார்பாக 231 மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தலா ரூ.5000 வீதம் ரூ.11 லட்சத்து 55 ஆயிரம், கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் வரை கடன்பெற்ற 24,940 பயனாளிகளுக்கு ரூ.77 கோடியே 58 லட்சம் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆணை வழங்கும் விழா நடந்தது.
மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, நிவாரண உதவித் தொகை மற்றும் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆணையினை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
அடிப்படை வசதி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதாரண மக்களுக்கும், அடிப்படை வசதி இல்லாத மக்களுக்கும் என்ன தேவை என்பதை அறிந்து அதற்கேற்றார் போல் பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். உலகமே பாராட்டுகின்ற அளவிற்கு முதல்-அமைச்சருடைய செயல்பாடுகள் உள்ளது. விவசாயம் மற்றும் கல்வி போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து மற்ற மாநிலங்களை காட்டிலும் பல புதிய திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் செயல்படும் அனைத்து கூட்டுறவு சங்கங்களில் இருந்து 14 லட்சத்து 46 ஆயிரத்து 700 தகுதியான பயனாளிகளை அடையாளம் கண்டு ரூ.5,366 கோடி மதிப்பில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 24,980 பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்திட வேண்டும்
தமிழக முதல்வர் மக்களுக்கு என்ன தேவை என்பதை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அமைச்சர்களாகிய எங்களுக்கும் மக்கள் திட்டங்கள் குறித்து அறிவுரை வழங்கி வருகிறார். ஒரு ஆட்சிக்கு நற்பெயர் வருவதும், கெட்டபெயர் வருவதும் உள்ளாட்சியில் இருந்துதான். ஆதலால் ஒவ்வொரு கிராமத்திற்கும் என்ன தேவை என்பதை அறிந்து அதனை அரசுக்கு, உள்ளாட்சி பிரதிநிதிகள் தெரியப்படுத்தி மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்திட வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் மக்கள் ஆட்சி, நேர்மையான ஆட்சி, வெளிப்படைத்தன்மை ஆட்சி நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் மண்பாண்ட தொழிலாளர்களின் செயல்விளக்க கண்காட்சியை பார்வையிட்டார்.
விழாவில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., கதர் கிராம தொழில் வாரிய மண்டல துணை இயக்குனர் பாலகுமாரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ,கதர் கிராம தொழில் வாரிய உதவி இயக்குனர் சிவக்குமார், கண்காணிப்பாளர் நாகலிங்கம், கூட்டுறவு சங்கங்கள் துணைப்பதிவாளர் சந்திரன், நகரமன்ற தலைவர் சுஜாதாவினோத் மற்றும் ஒன்றியக் குழுத் தலைவர்கள், நகர மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story