இறந்த யானைக்கு ஆந்த்ராக்ஸ் தொற்று இல்லை
இறந்த யானைக்கு ஆந்த்ராக்ஸ் தொற்று இல்லை
கோவை
கோவை கோட்டத்திற்கு உட்பட்ட தடாகம் வனப்பகுதியில் கடந்த 17-ந் தேதி ஒரு ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த யானை இறந்து சில நாட்கள் ஆகியிருந்ததால் மிகவும் துர்நாற்றம் வீசியது. மேலும் அந்த யானை ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி இறந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதையடுத்து பி.பி.கிட் அணிந்த முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் மற்றும் குழுவினர் ஆய்வு செய்தனர்.
பின்னர் இறந்த யானையின் உடலில் இருந்து ரத்தம் உள்ளிட்ட மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இறந்த யானையின் உடலில் குண்டுகள் உள்ளதா என்பதை கண்டறிய மெட்டல் டிடெக்டர் மூலமும் சோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஆய்வக அறிக்கையில் காட்டு யானைக்கு ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கப்படவில்லை என்று அறிக்கை வந்து உள்ளது. இதுகுறித்து கோவை கோட்ட வன அதிகாரி அசோக்குமார் கூறியதாவது:- இறந்த காட்டு ஆண் காட்டு யானைக்கு 30 வயது இருக்கும். அந்த யானை ஆந்த்ரக்ஸ் காரணமாக உயிரிழக்கவில்லை என்று ஆய்வக பரிசோதனை முடிவில் வந்து உள்ளது. இதையடுத்து அந்த யானை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.
மேலும் யானையின் உடலில் இருந்த 2 தந்தங்களும் அகற்றப்பட்டது. மற்றொரு யானையுடன் நடைபெற்ற சண்டையின் போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக இந்த காட்டு யானை இறந்து இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story