மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் மோசடி


மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 20 March 2022 10:07 PM IST (Updated: 20 March 2022 10:26 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் ராணுவ வீரரின் மகன் உள்பட 7 பேருக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் மோசடி செய்த மின்வாரிய பெண் அதிகாரி மற்றும் கோவில் பூசாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேனி: 

உத்தமபாளையம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி மதுரைவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன். முன்னாள் ராணுவ வீரர். கடந்த 2 ஆண்டுகளாக தேவதானப்பட்டி காமாட்சியம்மன் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். 

அதே கோவிலில் காமயகவுண்டன்பட்டி சுருளிமெயின் ரோடு பகுதியை சேர்ந்த ராஜலிங்கம் என்பவரும் பூசாரியாக வேலை பார்த்தார். இந்நிலையில், சோழவந்தான் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றும் மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை பாரதி நகரை சேர்ந்த சத்யா என்பவரை, குணசேகரனுக்கு ராஜலிங்கம் அறிமுகம் செய்து வைத்தார். மின்வாரியத்தில் பலருக்கு சத்யா வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும், அவரிடம் பணம் கொடுத்தால் நிச்சயம் வேலை வாங்கிக் கொடுத்து விடுவார் என்றும் ராஜலிங்கம் ஆசை வார்த்தைகள் கூறினார்.

இதை நம்பிய குணசேகரன் தனது மகனுக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கிக் கொடுக்குமாறு ராஜலிங்கம், சத்யா ஆகியோரிடம் ரூ.2 லட்சம் முன்பணமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், அதே ஊரைச் சேர்ந்த மேலும் 6 பேரும் மின்வாரியத்தில் வேலை வாங்கிக் கொடுக்க ரூ.7 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தனர். 

மொத்தம் ரூ.9 லட்சத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் மோசடி செய்தனர். இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம், குணசேகரன் புகார் கொடுத்தார். அதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். 

அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சீமைராஜ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து ராஜலிங்கம், சத்யா ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story