மரம் விழுந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதல்; சிறுமி சாவு


மரம் விழுந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதல்; சிறுமி சாவு
x
தினத்தந்தி 20 March 2022 10:29 PM IST (Updated: 20 March 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

மரம் விழுந்ததால் தாறுமாறாக ஓடிய கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சிறுமி உயிரிழந்தாள். மேலும் மைசூருவில் மின்னல் தாக்கி முதியவர் ஒருவர் இறந்தார்

மைசூரு:
மைசூரு, மண்டடியா மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் மழை பெய்தது. மரம் விழுந்ததால் தாறுமாறாக ஓடிய  கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சிறுமி உயிரிழந்தாள். மேலும் மைசூருவில் மின்னல் தாக்கி முதியவர் ஒருவர் இறந்தார். 

 சிறுமி சாவு

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதேபோல் மைசூரு, மண்டியா மாவட்டங்களிலும் மழை பெய்தது. மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா வல்லூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. 

அப்போது அந்த பகுதியில் இருந்த தென்னை மரம் முறிந்து அந்த வழியாக சென்ற கார் மீது விழுந்தது. இதனால் கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதில் மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் சென்ற பிரியங்கா(வயது 12) என்ற சிறுமி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறுமியின் தந்தை காயம் அடைந்தார். 

 மின்னல் தாக்கி முதியவர் பலி

இதேபோல் மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் தாலுகா அனசோகே கிராமத்தை சேர்ந்தவர் சித்தலிங்க நாயக்கா(72). இவர், மரத்தடியில் நின்றபோது மின்னல் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவங்கள் குறித்து ஸ்ரீரங்கப்பட்டணா, கே.ஆர்.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

Next Story