குளிர்பானம் குடித்த பெண், சிகிச்சை பலனின்றி சாவு
மூங்கில்துறைப்பட்டு அருகே குளிர்பானம் குடித்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
மூங்கில்துறைப்பட்டு,
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மல்லாபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன்(வயது 38). இவருடைய மனைவி தொப்பாய்(35). இவர்களுடைய மகன் மதன்(6), மகள் ரக்சனா(3). சம்பவத்தன்று வீட்டின் முன்பு பாட்டிலில் இருந்த குளிர்பானத்தை மணிவண்ணனின் தாய் லட்சுமி(58) குடித்துள்ளார். பின்னர் அதை தனது பேத்தியான ரக்சனாவுக்கும் கொடுத்தார். குளிர்பானத்தை குடித்த இருவருக்கும் சிறிது நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து சிறுமி ரக்சனா சேலம் அரசு மருத்துவமனைக்கும், லட்சுமி சென்னை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரக்சனா பரிதாபமாக உயிரிழந்தார்.
பெண் பலி
இந்த நிலையில் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த லட்சுமி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.
இதுபற்றி அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்துக்கு திரண்டு சென்றனர். தொடர்ந்து அவர்கள் குளிர்பானத்தில் விஷம் கலந்திருந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசாரிடம் தெரிவித்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story