தேர்தல் வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்


தேர்தல் வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்
x
தினத்தந்தி 20 March 2022 10:41 PM IST (Updated: 20 March 2022 10:41 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என நாகையில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு கூட்டத்தில் முத்தரசன் கூறினார்.

வெளிப்பாளையம்:
தேர்தல் வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என நாகையில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு கூட்டத்தில் முத்தரசன் கூறினார்.
பொதுக்கூட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம், நாகை அவுரித்திடலில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.  கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது:-
தமிழகத்தில் மதசார்பற்ற நல்லாட்சி நடைபெற்று கொண்டிருப்பது பாராட்டுக்குறியது. அரசுப் பள்ளியில் பயின்று, உயர்கல்வி பயில செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை மற்றும் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவைகள் நிதி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
மாதாந்திர உரிமை தொகை
 பெண்களுக்கு மாதாந்திர உரிமை தொகை, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்திட்டம் மற்றும் தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரம் ஆகியவை குறித்து பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்பும் இடம் பெறாதது ஏமாற்றமளிக்கிறது. தமிழக மக்கள் நல்லாட்சி நடைபெறும் என்ற நம்பிக்கையில் தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வக்களித்தனர்.
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும். நீர்நிலை பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஒரு குழுவை அமைத்து, உரிய முறையில் ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும். 
பகுதிமுறை வாடகை
 இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களுக்கு கடந்த ஆட்சிக்காலத்தில் கூடுதல் வாடகை கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதே தவறை தற்போதைய அரசு செய்யாமல், பகுதி முறை வாடகை வசூலிக்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்துக்கு கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ் எம்.பி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் சிவபுண்ணியம் (திருவாரூர்), சம்பந்தம் (நாகை), சீனிவாசன் (மயிலாடுதுறை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில் அகில இந்திய பொதுச்செயலாளர் ராஜா, தேசிய மாதர் சம்மேளன அகில இந்திய பொதுச்செயலாளர் ஆனி ராஜா, நிர்வாகி மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமி, வீரபாண்டியன், பத்மாவதி, பெரியசாமி மற்றும் மாநில நிர்வாக குழு உறுப்பினர் வக்கீல் பாண்டியன் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

Next Story