பங்குனி திருவிழா தேரோட்டம்


பங்குனி திருவிழா தேரோட்டம்
x
தினத்தந்தி 20 March 2022 10:51 PM IST (Updated: 20 March 2022 10:51 PM IST)
t-max-icont-min-icon

கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

காளையார்கோவில், 
கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பங்குனி திருவிழா
காளையார்கோவில் அருகே உள்ளது கொல்லங்குடி. இங்குள்ள அரியாகுறிச்சி பகுதியில்  பிரசித்தி பெற்ற வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இ்ந்த ஆண்டிற்கான விழா கடந்த 12-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் காலை அம்மன் கேடக வாகத்திலும் இரவு கிளி, அன்னம், சிம்மம், தங்க ரதத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
9-ம் நாள் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5.15 மணி முதல் 6.15 மணிக்குள் கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
தேரோட்டம்
அதன் பின்னர் காலை 8.15 மணிக்கு தேரில் எழுந்தருளிய அம்பாளுக்கு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டு கொடி அசைக்கப்பட்டதும் அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தொடங்கினர். அதற்கு முன்பு சிறிய தேரில் விநாயகர் எழுந்தருளி அம்பாள் தேருக்கு முன்பு கோவிலை சுற்றி வலம் வந்தார். 
அதற்கு பின்னால் அம்பாள் தேர் கோவிலின் 4 ரத வீதிகள் வழியாக வீதி உலா வந்து காலை 9 மணிக்கு நிலையை வந்தடைந்தது. தேர் நிலையை வந்தடைந்ததும் அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பெண்கள் கைத்தட்டியும், சில பக்தர்கள் பூமாலைகளை கொண்டு தேரில் எறிந்தும் வணங்கினர். அதன்பின்னர் அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 
நேர்த்திக்கடன்
தேரோட்டம் நடைபெற்றபோது தேர் சென்ற வீதியில் தேருக்கு பின்னால் ஏராளமான பெண்கள் கோவிலை சுற்றி விழுந்து எழுந்து வணங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து இரவு யானை வாகனத்தில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. 10-ம் நாளான இன்று காலை 9.15 மணிக்கு மேல் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சியும், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நாளை ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் உதவி ஆணையர் சிவலிங்கம், கோவில் செயல் அலுவலர் ஞானசேகரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Next Story