ஓட்டப்பிடாரம் அருகே லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு 2 வாலிபர்கள் கைது
லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்
ஓட்டப்பிடாரம்,
மார்ச்.21-
ஓட்டப்பிடாரம் அருகே, லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
லாரி டிரைவர்
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குலசேகரநல்லூர் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் மாயகிருஷ்ணன் (வயது 19). லாரி டிரைவர்.
நேற்று காலையில் இவரது வீட்டின் அருகே அதே ஊரைச் சேர்ந்த எட்டப்பன் மகன் முத்துமாரியப்பன் (25), அவரது நண்பர்கள் ஓசநூத்து கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் செல்வகுமார் (28), தெற்கு ஆரைக்குளம் கிராமத்தை முருகன் மகன் இசக்கிராஜா (20), சீவலப்பேரி அருகே உள்ள மடத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவா (25) ஆகியோர் நின்று கொண்டிருந்தனர்.
அரிவாள் வெட்டு
இதுபற்றி மாயகிருஷ்ணன் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே முத்துமாரியப்பன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாயகிருஷ்ணனை வெட்டியுள்ளார்.
இதை அறிந்ததும் அக்கம் பக்கத்தில் அங்கு திரண்டனர். உடனே முத்துமாரியப்பன் மற்றும் நண்பர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர்.
அப்ேபாது முத்துமாரியப்பன் மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார். இதில் முத்துமாரியப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
கைது
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் ஓட்டப்பிடாரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
மாயகிருஷ்ணனுக்கு ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி செய்யப்பட்டு பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தப்பி ஓடும்போது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்த முத்துமாரியப்பனை போலீசார் கைது செய்தனர். அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தப்பி ஓட முயற்சி செய்த செல்வகுமாரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் தப்பி ஓடிய இசக்கிராஜா மற்றும் சிவாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story