திருவட்டார் அருகே தாயை கட்டையால் அடித்துக் கொன்ற மகன் கைது
திருவட்டார் அருகே மது போதையில் தாயை கட்டையால் அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
திருவட்டார்,
திருவட்டார் அருகே மது போதையில் தாயை கட்டையால் அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பால்வெட்டும் தொழிலாளி
குமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த செப்பள்ளிவிளையை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 72). இவருடைய மனைவி சரோஜினி (70), மாற்றுத்திறனாளி. இவர்களது ஒரே மகன் விஜயன் (48), ரப்பர் பால்வெட்டும் தொழிலாளி.
இவருக்கு மனைவியும் ஒரு மகனும் இருந்தனர். கணவன், மனைவி இடைேய ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி, விஜயனை விட்டு பிரிந்து மகனுடன் அருகில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து விஜயன் கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு பால்வெட்டும் வேலைக்கு செல்வது வழக்கமாம். அவ்வாறு சம்பாதித்த பணத்தில் ஊர் திரும்பியவுடன் மது குடித்து ெசலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது பால்வெட்டும் சீசன் தொடங்காததால் ஊரிலேயே இருந்தார்.
மதுபோதையில்...
இந்தநிலையில் அருகில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் கடனுக்கு விண்ணப்பித்து இருந்தார். இந்த கடன் தொகை நேற்று முன்தினம் கிடைத்தது. இதையடுத்து திருவட்டாரில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் இருந்து அந்த கடன் தொகையான ரூ.9 ஆயிரத்தை எடுத்தார்.
பணம் கையில் கிடைத்ததும் விஜயனுக்கு மதுகுடிக்கும் ஆசை ஏற்பட்டது. உடனே மதுக்கடைக்கு சென்று அதிக அளவு மது குடித்தார். பின்னர் மீதி பணத்தை பையில் வைத்து கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். வரும் வழியில் வயக்கத்தாழை குளம் அருகே போதையில் மயங்கி விழுந்தார்.
தாய் கொலை
சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்த போது அவரது பையில் இருந்த பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இரவில் வீட்டுக்கு வந்து தாயாரிடம் ‘வீட்டில் வைத்திருந்த பணத்தை காணவில்லை, நீ எடுத்தாயா?’ என்று கேட்டு தகராறு செய்தார்.
எடுக்கவில்லை என தாயார் எவ்வளவோ கூறியும் விஜயன் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த விஜயன் வீட்டில் இருந்த மரக்கட்டையை எடுத்து தாய் என்றும் பாராமல் சரோஜினியின் தலை, கால் என மாறி மாறி அடித்தார்.
இதில் சரோஜினி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். தொடர்ந்து விஜயன், தாயார் மயங்கி விட்டதாக நினைத்து போதையில் அங்கேயே தூங்கி விட்டார். நேற்று அதிகாலையில் கண் விழித்து வெளியே சென்றார். இந்த சம்பவம் நடந்த போது தேவராஜ் மற்றொரு அறையில் உடல்நலமின்றி தூங்கி கொண்டிருந்தார். நேற்று காலையில் வெகுநேரமாகியும் சரோஜினி வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் ஜன்னலை திறந்து பார்த்தபோது உள்ளே சரோஜினி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜாங்கப்பெருமாள், ஜெயராம், ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசனும் நேரடியாக வந்து விசாரித்தார்.
தொடர்ந்து சரோஜினியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரை தாக்க பயன்படுத்திய கட்டையையும் போலீசார் கைப்பற்றினர்.
கைது
இதுதொடர்பாக திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயனை தேடினர். அப்போது, அந்த பகுதியில் மறைந்திருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story