கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் ெசலுத்தினர்.
பொன்னமராவதி:
பால்குட ஊர்வலம்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், கொன்னையூரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி பெருந்திருவிழாவான பூச்சொரிதல் விழா மற்றும் பால்குடம் விழா அதிவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து பொன்னமராவதி, கொன்னைப்பட்டி, மூலங்குடி, ரெட்டியாபட்டி, காட்டுப்பட்டி, செம்பூதி, ஆலவயல், மேலமேலநிலை, மலம்பட்டி, தேனூர் கொன்னையம்பட்டி, வலையப்பட்டி, நெற்குப்பை, வேந்தன்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றினர்.
மேலும் பக்தர்கள் பால்குடமும் எடுத்து ஊர்வலமாக வந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பொன்னமராவதி வர்த்தக வணிகர்கள், நகைக்கடை உரிமையாளர்கள், கல்லூரி மாணவர்கள், லயன்ஸ் சேவை சங்கங்கள் சார்பிலும் பல்வேறு இடங்களில் வெயில் தாகம் தீர்க்க பக்தர்களுக்கு நீர்மோர், பானகம் வழங்கி வருகின்றனர்.
இன்று தீமிதி நிகழ்ச்சி
இதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. இதில் சுற்றுவட்டார பகுதி ஊரார்கள் சார்பில் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள 14 அக்னி குண்டங்களில் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்து வந்து இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், காரைக்குடி, சிவகங்கை பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வருகைக்காக பொன்னமராவதி போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளது. பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரகுமான், இன்ஸ்பெக்டர் தனபாலன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் செயல் அலுவலர் சந்திரசேகரன் மற்றும் பூசாரிகள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story