15 ஆயிரம் பூந்தொட்டிகளில் மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு


15 ஆயிரம் பூந்தொட்டிகளில் மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு
x
தினத்தந்தி 21 March 2022 12:41 AM IST (Updated: 21 March 2022 12:41 AM IST)
t-max-icont-min-icon

ஏற்காடு கோடை விழாவை முன்னிட்டு சுமார் 15 ஆயிரம் பூந்தொட்டிகளில் மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் கார்மேகம் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

சேலம்:-
ஏற்காடு கோடை விழாவை முன்னிட்டு சுமார் 15 ஆயிரம் பூந்தொட்டிகளில் மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் கார்மேகம் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஏற்காடு கோடை விழா
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையான மே மாதத்தில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை.
இதனிடையே, கொரோனா நோய் தொற்று கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு ஏற்காட்டில் கோடை விழா, மலர் கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதை முன்னிட்டு அண்ணா பூங்காவில் சுமார் 15 ஆயிரம் பூந்தொட்டிகளில் பல்வேறு வகையான பூஞ்செடிகள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆலோசனை கூட்டம்
ஆனால் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மே மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுத்தேர்வு முடிவடைந்தவுடன் கோடை விழாவை நடத்தலாமா? என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததையொட்டி ஏற்காட்டில் கோடை விழாவை எவ்வாறு நடத்துவது?, எத்தனை நாட்கள் நடத்தலாம்?, அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கணேசன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மீனாட்சி சுந்தரம், ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்முருகன், தாசில்தார் ரவிக்குமார் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
15 ஆயிரம் தொட்டிகளில்
கூட்டத்தில், ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை சிறப்பான முறையில் நடத்துவது என்றும், அனைத்து அமைச்சர்களையும் அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் எந்த தேதியில் மலர் கண்காட்சி நடத்துவது என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மலர் கண்காட்சிக்கு வழக்கமாக சுமார் 10 ஆயிரம் பூந்தொட்டிகளில் பல வகையான பூஞ்செடிகள் பார்வைக்காக வைக்கப்படும்.
ஆனால் இந்த ஆண்டு 15 ஆயிரம் தொட்டிகளில் பல வகையான பூ விதைகள் வைத்து அதை தோட்டக்கலைத்துறை அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது அண்ணா பூங்காவில் வைக்கப்பட்டுள்ள சில பூந்தொட்டிகளில் பூக்கள் முளைத்திருப்பதை காணமுடிகிறது.
முழுவீச்சில் ஏற்பாடுகள்
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஏற்காடு கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. டபுள் லைட், மார்கோ போலோ, மேஜிக் லேன்டர், பேமிலி மூன், சம்மர் ஸ்நோ, ரெட் டிரான், சம்மர் டைம், பர்புல்மூன், மிலகி வே, சில்வர் லிவிங், டேபிள் மவுண்டைன், புளோரிமண்டா உள்பட 15 வகையான ரோஜாக்களும், லில்லியம், ஜினியா, மேரிகோல்டு, சால்வியா, ஆஸ்டர் உள்ளிட்ட பலவகையான மலர்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. மேலும், புதிய வரவாக ஊட்டி, கொடைக்கானலில் இருந்து லில்லியம் என்ற வகை பூக்களும் பார்வைக்கு வைக்கப்படும். மலர் கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது, என்றனர்.

Next Story