பட்டாசு கழிவுகள் வெடித்து சிதறின; 3 பேர் படுகாயம்
தீ வைத்தபோது பட்டாசு கழிவுகள் வெடித்து சிதறின. இந்த வெடிவிபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தாயில்பட்டி,
தீ வைத்தபோது பட்டாசு கழிவுகள் வெடித்து சிதறின. இந்த வெடிவிபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
பட்டாசு திரி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மடத்துப்பட்டியை சேந்தவர் வெங்கடேஷ் (வயது 44). இவர் தாயில்பட்டி அருகே உள்ள சத்திரப்பட்டியில் சொந்தமாக பட்டாசு குடோன் வைத்துள்ளார். இந்த பட்டாசு குடோனுக்கு அருகிலேயே தற்காலிக செட் அமைத்து உள்ளனர்.
இந்த நிலையில் வெங்கடேஷ் மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த என்மத்ராவ்(36) ஆகியோர் சேர்ந்து அனுமதியின்றி விதிகளை மீறி பட்டாசுக்கு தேவையான திரியை தயார் செய்ததாக தெரியவருகிறது. இவர்கள் பட்டாசு குடோனுக்கு அருகில் பட்டாசு திரி தயார் செய்து வந்துள்ளனர்.
வெடித்து சிதறின
இந்த நிலையில் நேற்று முன்தினம் என்மத்ராவ், ஒடிசாவை சேர்ந்த லிட்டின்(26) மற்றும் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஹேமந்த ராவ்(20) ஆகிய 3 பேரும் பட்டாசுக்கு தேவையான திரிகளை தயார் செய்த பின்னர் அருகில் உள்ள ஓடையில் பட்டாசு கழிவுகளை தீ வைத்து கொளுத்தினர். அப்போது, பட்டாசு கழிவுகள் பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறின. இந்த வெடிவிபத்தில் 3 பேரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
கைது
இதில் மிகவும் படுகாயமடைந்த லிட்டின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், தாசில்தார் சுந்தரமூர்த்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வெடிவிபத்து தொடர்பாக கணஞ்சாம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில், அனுமதியின்றி பட்டாசு திரி தயாரித்ததாக வெங்கடேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story