தஞ்சை மாவட்டம் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடு


தஞ்சை மாவட்டம் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடு
x
தினத்தந்தி 21 March 2022 1:28 AM IST (Updated: 21 March 2022 1:28 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டம் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது என அறிவுசார் சொத்துரிமை வக்கீல் சங்க தலைவர் சஞ்சய்காந்தி கூறினார்.

தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம்  நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது என அறிவுசார் சொத்துரிமை வக்கீல் சங்க தலைவர் சஞ்சய்காந்தி கூறினார்.
பேட்டி
தஞ்சை சுற்றுலா ஆய்வு மாளிகையில் அறிவுசார் சொத்துரிமை வக்கீல் சங்க தலைவரும், சென்னை ஐகோர்ட்டு அரசு வக்கீலுமான சஞ்சய் காந்தி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
. தஞ்சை மாவட்டம் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் மிகவும் பிரசித்தி பெற்றது. 17-ம் நூற்றாண்டு முதல், நாதஸ்வரம் என்ற இசைக்கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நாதஸ்வர இசையில் "சுத்த மத்தியமம் ஸ்வரம்" மற்றும் "பிரதி மத்தியமம் ஸ்வரம்" கொண்டு தான் தாய் ராகங்களை பிரித்து வாசிக்கப்படும். 1955-ம் ஆண்டுக்கு முன்பு வரை பிரதி மத்தியமம் ஸ்வரத்தை வைத்து தான் நாதஸ்வர கலைஞர்கள் வாசித்து வந்தனர். 1955-ம் ஆண்டுக்கு முன்பு வரை சுத்த மத்தியமம் ஸ்வரம் என்பது கிடையாது.
கடினம்
ஆனால் நாதஸ்வர கருவியில் வாசிக்கும்போது, கலைஞர்கள் சுத்த மத்தியமம் ஸ்வரம் என்பதை ஒரு அனுமானமாக, உத்தேசித்து, வாசித்து வந்தனர். இதுபோல, வாசிப்பது கடினமானது. இந்த கடினத்தை போக்கும் வகையில் கும்பகோணம் அருகே உள்ள நரசிங்கம்பேட்டை கைவினைக்கலைஞர் என்.ஜி.என். ரங்கநாத ஆசாரி 1955-ம் ஆண்டில் சுத்த மத்தியமம் ஸ்வரத்தை கண்டுபிடித்து, அதை நாதஸ்வர கருவியில் உருவாக்கினார்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட நாதஸ்வர கருவிதான் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம். இது உலகில் மிகப்பெரிய ஒரு பரிணாமத்தை உருவாக்கி நாதஸ்வர இசை வளர்ச்சிக்கு வித்திட்டது. திராவிடர்களின் இசைக்கருவியான இந்த நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்தை செய்வதற்கு மரங்களில் வலிமையான ஆச்சா மரம் பயன்படுத்தப்படுகிறது. நடு பாகத்தில் உள்ள ஓட்டையை பொறுத்து தான் நாதஸ்வர ஓசை அமையும். 12 துளைகளை போடுவதில் மிகவும் கவனம் செலுத்தி துளைகளை போடுவார்கள். இதில், உழவு, அனைசு, சீவாளி என மூன்று பகுதிகள் உள்ளன.
புவிசார் குறியீடு
இந்த நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதி புவிசார் குறியீடு கோரி தஞ்சை இசைக்கருவிகள் உற்பத்தி மற்றும் குடிசை தொழில் கூட்டுறவு சங்கம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது. இதற்காக அறிவுசார் சொத்துரிமை மையத்தை சேர்ந்த சுலோச்சனா பன்னீர்செல்வம் உதவி செய்தார். தொடர்ந்து 8 ஆண்டுகள் போராடி இந்த புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
இனிமேல், இந்த வகையான நாதஸ்வரத்தை வேறு எந்த ஊரிலும் வேறு எந்த கலைஞர்களாலும் உருவாக்க முடியாது. அப்படி யாராவது வடிவமைத்து விற்பனை செய்தால் அது சட்டப்படி குற்றமாகும். ஏற்கெனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தற்போது 10-வது பொருளாக நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்திற்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று கொடுத்துள்ளேன். மேலும் 5 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வாங்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story