பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம்


பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 21 March 2022 1:35 AM IST (Updated: 21 March 2022 1:35 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

உடையார்பாளையம்:

விழிப்புணர்வு கூட்டம்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த செட்டுகுழிபள்ளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக சார்பில் பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியை கிளாடிஸ்பிரபாவதி தலைமை தாங்கி, பள்ளி மேலாண்மை குழுவின் முக்கியத்துவத்தையும், செயல்படுத்தும் விதம் பற்றியும் விளக்கி கூறினார். இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மலர்கொடி, பெற்றோர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த கூட்டத்தில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தை தலைமை ஆசிரியர் அறிவழகன் ஒருங்கிணைத்தார். இதில் மாணவர்களின் பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்தவர் மற்றும் தலைமை ஆசிரியர் உள்பட 20 பேர் உறுப்பினராக இருக்கும் வகையில் பள்ளி மேலாண்மை குழு ஏற்படுத்தப்பட்டது. இந்த குழு அமைக்கப்பட்டதன் நோக்கம் குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த குழுவின் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்வு பின்னர் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதில் ஊர் முக்கியஸ்தர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தா.பழூர், செந்துறை
தா.பழூர் வட்டாரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளிட்ட 98 பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் உள்ளிட்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள் இந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டைல் காந்த், வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவழகன் ஆகியோர் தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தா.பழூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் பிலமன்ராஜ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆசிரியப் பயிற்றுனர்கள் சம்பத், மோகன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்ற கூட்டங்களில் பள்ளியின் பல்வேறு தேவைகள் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு அதனை நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செந்துறை அருகே உள்ள மணக்குடையான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் வசந்தா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சுமதி வரவேற்று, பள்ளி மேலாண்மை குழு பணிகள், குழு கட்டமைப்பு, அத்தியாவசிய பள்ளி தேவைகள் பற்றி விளக்கி கூறினார். இதில் பள்ளி மேலாண்மை குழு மக்கள் சந்திப்பு கலை குழுவினர், பாலின வேறுபாடு, பெண் பாதுகாப்பு குழு பொறுப்பு, கல்வியின் அவசியம் பற்றி நாடகம், பாடல்கள் மூலம் எடுத்துக்கூறினர். இதில் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story