வள்ளலாரின் 200-வது அவதார தின விழாவை கொண்டாட வலியுறுத்தல்
வள்ளலாரின் 200-வது அவதார தின விழாவை தமிழகம் முழுவதும் அரசே கொண்டாட வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட சன்மார்க்க சங்கத்தின் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் வக்கீல் சுந்தரராஜன் தலைமையில் நேற்று மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் வள்ளலாரின் 200-வது அவதார தின (ஜெயந்தி) ஆண்டை முன்னிட்டு தமிழக அரசு 5.10.2022 முதல் ஒரு வருட காலத்திற்கு வள்ளலாரின் 200-வது பிறந்த நாள் விழாவை கொண்டாட வேண்டும். மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் விழாக்கள் நடத்த வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகள் அளவில் சன்மார்க்க பேச்சுப் போட்டிகள், திருவருட்பா ஒப்பித்தல் நடத்தப்பட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அளவிலும், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்க வேண்டும். விழாவில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் சன்மார்க்க சங்க நிர்வாகிகளை உள்ளடக்கிய விழா குழுக்களை அரசு சார்பில் ஏற்படுத்தி சிறப்பான முறையில் விழாவை நடத்திட நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்-அமைச்சரையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் செயலாளர் நாராயணசுவாமி, பொருளாளர் வாசுதேவன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story