விஸ்வநாதர் கோவிலில் திருக்கல்யாணம்
விஸ்வநாதர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் நேற்று விஸ்வநாதர்-விசாலாட்சி திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி, அம்பாளுக்கு சீர்வரிசை எடுத்து வந்தனர். விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. விஸ்வநாதர், விசாலாட்சி அம்மனுக்கு பூலோக முறைப்படி திருமண சடங்குகள் ஒவ்வொன்றாக நடைபெற்றன. சீர்வரிசை வழங்குதல் மாப்பிள்ளை அழைப்பு ஆகியவை நிறைவு பெற்றபின் விக்னேஸ்வர பூஜையுடன் மாங்கல்ய தாரண ஹோமம் நடைபெற்றது. கோவில் அர்ச்சகர் பாலசுப்பிரமணியன் விஸ்வநாதர் கைகளில் இருந்து மாங்கல்யத்தை பெற்று அம்பாளுக்கு அணிவித்தார். மாங்கல்யதாரணம் முடிந்ததும் மாலை மாற்றும் வைபவம் ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடைபெற்றன. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சோடச உபசாரம் நடைபெற்றது. மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டது. சுவாமி, அம்பாளை நோக்கி பக்தர்கள் பல்வேறு பதிகங்களைப் பாடி வழிபாடுகளை மேற்கொண்டனர். பின்னர் பஞ்ச ஆரத்தி அலங்கார தீபம் உள்ளிட்ட உபசாரங்கள் நடைபெற்றன. மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கல்யாண வைபவத்தில் தா.பழூர் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story