முன்னோடி திட்டங்களை செயல்படுத்தும் விதமாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு -அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு


முன்னோடி திட்டங்களை செயல்படுத்தும் விதமாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு -அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு
x
தினத்தந்தி 21 March 2022 2:06 AM IST (Updated: 21 March 2022 2:06 AM IST)
t-max-icont-min-icon

முன்னோடி திட்டங்களை செயல்படுத்தும் விதமாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

மதுரை, 

முன்னோடி திட்டங்களை செயல்படுத்தும் விதமாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

மகளிர் மேம்பாடு

கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட முகாம், மதுரை வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளியில் நடந்தது. கலெக்டர் அனிஷ் சேகர் தலைமை தாங்கினார். மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும் தமிழக அரசு, ஆதரவற்றோர் பொருளாதாரத்தில் பின்தங்கியோர், வாய்ப்புகள் குறைந்தோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடையும் வகையில் செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு அரசு திட்டங்கள், பாதுகாப்பு சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக சமூக நீதி, மகளிர் மேம்பாடு, கல்வி முன்னேற்றம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

திராவிட மாடல்

சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தும் நோக்கில் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இது சமுதாய பற்று, பொதுமக்கள் மீது கொண்ட பற்றுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள, முற்றிலும் ”திராவிட மாடல்” பட்ஜெட். கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பெண்கள் திருமணத்திற்கு உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் கடந்த நான்கு 4 ஆண்டுகளாக பெயரளவில் மட்டுமே திட்டமாக இருந்து வந்துள்ளது. அதனை, நிர்வாக ரீதியாக சீர்செய்து தொடர்ந்து செயல்படுத்துவது சிரமமான காரியமாகும். எனவே மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்ப, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்ய இந்த திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி பெண் கல்வியை ஊக்குவித்திடும் வகையில் இதனை கல்வி உதவித்தொகை திட்டமாக நடைமுறைப்படுத்திட அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர் கல்வியில் இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். கல்வி வாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் பெண்கள் முன்னேறுகின்ற சமுதாயமே அனைத்து நிலைகளிலும் உயர்ந்த சமுதாயமாக அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.

ஆம்புலன்சு

முன்னதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக 486 பயனாளிகளுக்கு ரூ.59 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். அதனைத்தொடர்ந்து மதுரை மாவட்டத்திற்கு புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள 6 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன்மூலம் மதுரை மாவட்டத்தில் 108 ஆம்புலன்சுகளின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்து உள்ளது. 
விழாவில் வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் வெங்கடாசலம், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் சவுந்தர்யா, 108 ஆம்புலன்ஸ் திட்ட மண்டல மேலாளர் பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story