ராமஜெயம் கொலை வழக்கு-தனிப்படை விசாரணை


ராமஜெயம் கொலை வழக்கு-தனிப்படை விசாரணை
x
தினத்தந்தி 21 March 2022 2:14 AM IST (Updated: 21 March 2022 2:14 AM IST)
t-max-icont-min-icon

ராமஜெயம் கொலை வழக்கை 5 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 40 பேர் கொண்ட தனிப்படை விசாரணை நடத்த உள்ளனர்.

திருச்சி
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம். பிரபல தொழிலதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலை நடைபயிற்சி சென்றபோது, கடத்தி கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி-கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை அருகே கிடந்தது. ராமஜெயம் கொலை வழக்கை மாநகர காவல்துறை, சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. விசாரணை நடத்தியும் கடந்த 10 ஆண்டுகளாக இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்தநிலையில் இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில், போலீஸ் துணை சூப்பிரண்டு மதன், சி.பி.ஐ. அதிகாரி ரவி அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு திருச்சியில் முகாமிட்டு விசாரணையை தொடங்கி உள்ளனர். ராமஜெயம் கொலை வழக்கில் தகவல் தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும், தகவல் தருபவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
40 பேர் கொண்ட தனிப்படை
இதற்கிடையே ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க 5 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 40 பேர் கொண்ட தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. அதில், இன்ஸ்பெக்டர்கள் ஞானவேலன் (துவாக்குடி), சண்முகவேல் (மாநகர சைபர் கிரைம்), பாலமுருகன் (அருப்புக்கோட்டை), வீரக்குமார் (சென்னை பெருநகரம்), டி.குமார் (ஓமலூர்) ஆகிய 5 இன்ஸ்பெக்டர்கள், முத்துப்பாண்டி (அலங்காநல்லூர்), முருகன் (மதுரை தெற்குவாசல்), செந்தில்குமார் (மணிகண்டம்), அண்ணாதுரை(விழுப்புரம்), லோகேஸ்வரன்(எஸ்.பி.சி.ஐ.டி.) உள்பட 14 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏட்டுக்கள் என 40  பேர்இடம் பெற்றுள்ளனர்.
திறமையாக பணியாற்றியவர்கள்
இந்த 40 பேரும் பல்வேறு குற்ற வழக்குகளில் திறமையாக பணியாற்றியவர்கள் ஆவர். திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கு, பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கு, நவல்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் திறம்பட பணியாற்றி குற்றவாளிகளை கண்டறிய காரணமாக இருந்துள்ளனர். ஆகவே, ராமஜெயம் கொலை வழக்கில் எப்படியாவது குற்றவாளிகளை கண்டுபிடித்துவிடவேண்டும் என்ற முனைப்புடன் இந்த 40 பேரும் விசாரணை களத்தில் இறங்க இருப்பதாக சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரி ஒருவர் கூறினார்.

Next Story