‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
அறிவிப்பு பலகை மாற்றப்படுமா?
அந்தியூர் வாரச்சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரும் கால்நடைகள் மற்றும் வியாபார பொருட்களுக்கு நுழைவு கட்டணம் எழுதி அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதில் உள்ள நுழைவு கட்டணம் தெரியவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட நுழைவு கட்டணமே அந்த அறிவிப்பு பலகையில் உள்ளது. எனவே வாரச்சந்தையில் விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டுவரும் பொருட்களுக்கான நுழைவு கட்டணம் விவரம் தெரியும் அளவுக்கு பெயர் பலகை வைக்க வேண்டும்.
தமிழ்ச்செல்வி, அந்தியூர்.
உடைந்த சாக்கடை மூடி
ஈரோடு 4-வது வீரபத்ரா வீதியில் பாதாள சாக்கடை மூடி உடைந்து உள்ளது. இந்த ரோட்டில் தான் காய்கறி மார்க்கெட், மற்றும் மாணவிகள் விளையாட்டு விடுதி உள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவிகள் பெரும் சிரமப்படுகிறார்கள். எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு உடைந்த பாதாள சாக்கடை மூடியை சரிசெய்யவேண்டும்.
இளங்கோ, ஈரோடு.
பழுதடைந்த சாலை
ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து கோவை, திருப்பூர், மதுரை, பழனி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நாச்சியப்பா வீதி வழியாக செல்கின்றன. இந்த வழியாக தினமும் நூற்றுக்கணக்கான பஸ்களும், ஏராளமான வாகனங்களும் செல்கின்றன. அங்கு சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுகிறார்கள். எனவே சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரியங்கா, ஈரோடு.
அலுவலக கட்டிடத்தில் செடி
அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூட வளாகத்தில் அந்தியூர் வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் மேல் மாடியில் செடி வளர்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக கட்டிடத்தில் விரிசலும் ஏற்பட்டு உள்ளது. இதனால் கட்டிடம் பழுதடைய வாய்ப்பு உள்ளது. எனவே கட்டிடத்தின் நன்மை கருதி செடிகளை அகற்றுவதுடன், அதை முறையாக பராமரிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஜான் பிரிட்டோ, அந்தியூர்.
பாராட்டு
கோபியில் இருந்து சின்னமொடச்சூர் செல்லும் ரோட்டில் வேகத்தடை உள்ளது. இந்த வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள் என ‘தினத்தந்தி’ நாளிதழின் புகார் பெட்டி பிரிவு பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து சின்னமொடச்சூர் செல்லும் ரோட்டில் உள்ள வேகத்தடையில் சம்பந்தப்பட்ட துறை சார்பில் வர்ணம் பூசப்பட்டது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
பொதுமக்கள், கோபி.
Related Tags :
Next Story