‘நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுப்பவர்கள் பயங்கரவாதிகள்’; மந்திரி அரக ஞானேந்திரா சாடல்


‘நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுப்பவர்கள் பயங்கரவாதிகள்’; மந்திரி அரக ஞானேந்திரா சாடல்
x
தினத்தந்தி 21 March 2022 3:11 AM IST (Updated: 21 March 2022 3:11 AM IST)
t-max-icont-min-icon

நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுப்பவர்கள் பயங்கரவாதிகள் என்றும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது உறுதி என்றும் மந்திரி அரக ஞானேந்திரா சாடி உள்ளார்.

பெங்களூரு:

நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்

  ஹிஜாப் விவகார வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, பிற 2 நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விதானசவுதா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

  இந்த சம்பவம் குறித்து பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பயங்கரவாதிகள்

  ஹிஜாப் வழக்கில் மாநிலத்தில் அமைதியை காக்கவும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும் போலீசார் மற்றும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சந்தர்ப்பத்தில் ஹிஜாப் வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறிய நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பதை ஏற்று கொள்ள முடியாது. தற்போது சட்டம், போலீஸ் எந்த நிலையில் இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். அப்படி இருந்தும் நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் பயங்கரவாதிகளை போன்றவர்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது உறுதி. நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது.

  இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நீதிபதிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும்படி போலீசாருக்கு, முதல்-மந்திரியும் உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். துமகூருவில் நடந்த விபத்தில் பலியானவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கி உள்ளது. படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆகும் சிகிச்சை செலவை அரசே ஏற்கும்.
  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story