இலங்கைக்கு உதவும் நிலைப்பாட்டை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்; திருமாவளவன் எம்.பி. பேட்டி


இலங்கைக்கு உதவும் நிலைப்பாட்டை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்; திருமாவளவன் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 21 March 2022 3:24 AM IST (Updated: 21 March 2022 3:24 AM IST)
t-max-icont-min-icon

இலங்கைக்கு உதவும் நிலைப்பாட்டை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று திருமாவளவன் எம்.பி. கூறினார்.

தாமரைக்குளம்:
அரியலூருக்கு நேற்று வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், 21 மொழிகளில் பெரியாரின் சிந்தனைகள் வெளியிடப்படுவது போன்று, சட்டமேதை அம்பேத்கரின் சிந்தனைகளையும் வெளியிட அரசு முன்வர வேண்டும். எளிய மக்களின் நலன்களை பாதுகாக்கும் பட்ஜெட்டாக தமிழக அரசின் பட்ஜெட் விளங்குகிறது. இலங்கைக்கு இந்தியா செய்யும் உதவி வழக்கமானது என்றாலும், சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து கொண்டு இந்தியாவிற்கு எவ்வளவு நெருக்கடி நிலையை இலங்கை தந்துள்ளது என்பது உலகத்திற்கே தெரிந்த உண்மை. இதனைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு, சிங்கள அரசுக்கு உதவக்கூடிய நிலைப்பாட்டை பரிசீலிக்க வேண்டும். உக்ரைனில் இருந்து திரும்பிய‌ மாணவர்கள் படிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி தந்து, அதற்கான செலவை அரசே ஏற்க வேண்டும்.
பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்ததே அ.தி.மு.க.வின் சரிவுக்கு முக்கிய காரணமாகும். நாடாளுமன்ற தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தல் நிலைப்பாட்டை அ.தி.மு.க. எடுத்தால் தப்பிப்பதற்கான வழி உள்ளது. இல்லையென்றால் பெரும் சரிவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். அரியலூரில் இருந்து கடலூருக்கும், சிதம்பரத்திற்கும் விரைவில் போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படும். மாவட்ட தலைநகரான அரியலூரில் கேந்திர வித்யாலயா பள்ளி அமைப்பதற்காக 5 ஏக்கர் இடம் தேவைப்படுகிறது. இடம் கிடைத்தால் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு கலைக்கல்லூரி சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவில் கூடுதல் கட்டிடம் கட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து நிதி வழங்கப்பட உள்ளது, என்றார்.

Next Story