இருவழிச்சாலை அமைக்கும் பணியால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


இருவழிச்சாலை அமைக்கும் பணியால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
x
தினத்தந்தி 21 March 2022 3:24 AM IST (Updated: 21 March 2022 3:24 AM IST)
t-max-icont-min-icon

இருவழிச்சாலை அமைக்கும் பணியால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

மீன்சுருட்டி:

இருவழிச்சாலை
திருச்சியில் இருந்து சிதம்பரம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் இருந்து மாவட்ட எல்லையான ராமதேவநல்லூர் வரை இருவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மீன்சுருட்டி பகுதியில் பெரும்பாலான பகுதிகளில் தார் சாலை பெயர்க்கப்பட்டு, புதிதாக இருவழிச்சாலை அமைக்கப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வழக்கமாக சாலை அமைக்கும் பணி நடைபெறும்போது ஒரு புறம் தார் சாலை அமைக்கப்பட்ட பின்னர் மற்றொரு புறம் சாலை அமைக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால் வாகன ஓட்டிகள் சிரமமின்றி சென்று வருவார்கள். ஆனால் அவ்வாறு மீன்சுருட்டி பகுதியில் சாலை அமைக்காமல், இருபுறமும் முழுவதுமாக சாலை பெயர்க்கப்பட்டுள்ளது.
புழுதி மண்டலம்
இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். சாலையில் மணல் தேங்கி காணப்படுகிறது. மேலும் சாலை பெயர்க்கப்பட்டுள்ள பகுதிகளில் தண்ணீர் தெளிக்கப்படாததால், எதிர் எதிரே கனரக வாகனங்கள் மற்றும் பஸ்கள் வரும்போது சாலை பகுதி புழுதி மண்டலமாக காட்சியளிக்கிறது.
மேலும் இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளின் கண்களின் மணல், தூசி விழுவதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதோடு விபத்தில் சிக்கும் நிலையும் உள்ளது. சில சமயங்களில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைந்து, மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். மேலும் புழுதி பறப்பதால் சாலையோரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் நிலையும் உள்ளது.
கோரிக்கை
எனவே உடனடியாக மீன்சுருட்டி பகுதியில் இருந்து ராமதேவநல்லூர் வரை முதலில் ஒருபுறத்தில் சாலை அமைத்து, வாகன ஓட்டிகளுக்கு சிரமமின்றி சென்று வர வழிவகை செய்ய வேண்டும் என்றும், புழுதி பறக்காமல் இருக்க சாலைகளில் தண்ணீர் தெளிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story