பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி பெற விவசாயிகள் ஆதார் விவரங்களை பதிவேற்ற வேண்டுகோள்


பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி பெற விவசாயிகள் ஆதார் விவரங்களை பதிவேற்ற வேண்டுகோள்
x
தினத்தந்தி 21 March 2022 3:24 AM IST (Updated: 21 March 2022 3:24 AM IST)
t-max-icont-min-icon

பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி பெற விவசாயிகள் ஆதார் விவரங்களை பதிவேற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி கவுரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 4 ஆயிரத்து 55 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்தொகையானது விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 10 தவணைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது, விவசாயிகள் 11-வது தவணை தொகையை பெறுவதற்கு தங்களது ஆதார் விவரங்களை சரிபார்த்தல் அவசியம் ஆகும். தங்களது ஆதார் எண்ணுடன், செல்போன் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி கவுரவ நிதியுதவி திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து, ஓ.டி.பி. மூலம் சரிபார்த்து கொள்ளலாம். ஆதார் எண்ணுடன், செல்போன் எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள இ-சேவை மையங்களை அணுகி, பிரதம மந்திரி கவுரவ நிதியுதவி திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து, தங்களது விரல் ரேகையை பதிவு செய்து, விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம். இதற்கான கட்டணமாக ரூ.15-ஐ இ-சேவை மையங்களுக்கு செலுத்த வேண்டும். இந்த இரு முறைகளில் ஏதேனும் ஒரு முறையில் பயனாளிகளான விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை வருகிற 31-ந் தேதிக்குள் திட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ள அரியலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பழனிசாமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story