‘ஹிஜாப்' வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவு
‘ஹிஜாப்’ வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு தமிழகத்தில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதன் எதிரொலியாக அவர்கள் 3 பேருக்கும் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். மேலும் நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக தமிழகத்தில் கைதானவரை காவலில் எடுத்து விசாரிக்க பெங்களூரு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பெங்களூரு:
ஹிஜாப் அணிய தடை
கர்நாடகத்தில் ‘ஹிஜாப்' வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது. அதில் வகுப்பில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கூறப்பட்டது. அதாவது கல்வி நிலையங்களில் மத அடையாள ஆடைகளை அணிய தடை விதித்து மாநில அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கூறினர். மேலும் ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அத்தியாவசிய ஒரு வழக்கம் கிடையாது என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக ஐகோர்ட்டில் தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் கடந்த வாரம் ஒருநாள் முழு அடைப்பு நடத்தின. கர்நாடகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த முஸ்லிம்களும் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நடைபெற்ற முஸ்லிம்களின் போராட்டத்தில் பேசிய சிலர், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
நீதிபதிகள் குறித்து விமர்சனம்
அதாவது மதுரையில் நடந்த ஹிஜாப் தீர்ப்புக்கு எதிரான ஒரு ஆர்ப்பாட்டத்தில் தவ்ஹித் ஜமாத் அமைப்பின் மாநில தணிக்கை குழு தலைவர் கோவை ரஹமத்துல்லா கர்நாடக ஐகோட்டு நீதிபதிகளை கடுமையாக விமர்சித்து பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து அந்த மதுரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கோவை ரஹமத்துல்லாவை கைது செய்தனர்.
அதே போல் பெங்களூரு போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கொலை மிரட்டல்
ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு, மாநில அரசின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அந்த தீர்ப்பு வழங்கிய ஐகோர்ட்டு நீதிபதிகள் 3 பேருக்கு தமிழ்நாட்டில் சிலரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோர்ட்டு தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மனுதாரர்களுக்கு தீர்ப்பு திருப்தி அளிக்காவிட்டால், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவகாசம் உள்ளது. ஆனாலும் சில சமூக விரோத சக்திகள், நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்து அதன் மூலம் மக்களை தூண்டிவிடும் செயலில் ஈடுபடுகிறார்கள். தமிழ்நாட்டில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கர்நாடக பார் கவுன்சில், விதான சவுதா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. அதன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
இந்த விவகாரத்தை அரசு தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தும்படி போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டுள்ளேன். தமிழகத்தில் கைதானவரை போலீசார் தங்கள் வசம் பெற்று விசாரணை நடத்துவார்கள். அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தீர்ப்பு வழங்கிய மூன்று நீதிபதிகளுக்கும் ‘ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தாங்கள் மதசார்பற்ற கொள்கைவாதிகள் என்று கூறிக்கொள்பவர்கள் மவுனமாக உள்ளனர். அவர்கள் தங்களின் மவுனத்தை கலைக்க வேண்டும். ஒரு பிரிவு மக்களை கவர்வது மதசார்பற்ற கொள்கை அல்ல. அது தான் உண்மையான மதவாதம். அதை கண்டிக்கிறேன். சில சக்திகள் நமது நாட்டின் நிர்வாக கட்டமைப்புக்கு சவால் விடும் வகையில் நடந்து கொள்கிறார்கள். அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து சமூக விரோத சக்திகள் மீது நடவடிக்கை எடுத்து அதன் மூலம் நீதித்துறையை பாதுகாக்க வேண்டும். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பான முறையில் பராமரிக்கப்படுகிறது.
ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்
இதுபோன்ற விவகாரங்கள் நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. அனைத்து தரப்பினரும் சமூக விரோதிகளை கண்டிக்க வேண்டும். பள்ளி-கல்லூரிகள் இருக்கும் பகுதிகளில் பஸ்களில் அதிகம் பேரை ஏற்றி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அத்தகைய பஸ்களின் உரிமத்தை ரத்து செய்யும்படியும் அறிவுறுத்தி இருக்கிறேன்.
அத்தகைய பஸ்கள் ஒடும் பகுதிகளில் அடிக்கடி சோதனை நடத்தும்படியும் கூறி இருக்கிறேன். காயம் அடைந்தவர்களுக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டால் அவர்களை பெங்களூருவுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளேன். அவர்களின் சிகிச்சை செலவை அரசே ஏற்றுக்கொள்ளும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story