பெருங்குடி குப்பை மறுசுழற்சி திட்டபணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவு
பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் ஆய்வு செய்த தலைமை செயலாளர் வெ.இறையன்பு, குப்பை மறுசுழற்சி திட்டபணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்.
தலைமை செயலாளர் ஆய்வு
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5 ஆயிரத்து 100 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யும் வகையில் பதனிடும் மையங்களுக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள கழிவுகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் உயிரி அகழ்ந்தெடுத்தல் (பையோ மைனிங்) பணியை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
அங்கு, பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வரும் குப்பைகள் உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் களையப்பட்டு அவற்றிலிருந்து கல், மணல், இரும்பு, மரக்கட்டைகள், கண்ணாடி, ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தனியாக பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்யப்பட்டு வரும் திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், பணிகளை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்துக்குள் நிறைவு செய்ய வேண்டுமென ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்.முன்னதாக, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, பள்ளிக்கரணையில் உள்ள குப்பை கொட்டும் வளாகத்தில் திடக்கழிவுகளிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களை தனியாக பிரித்து பண்டல்களாக மாற்றும் எந்திரத்தின் செயல்பாடுகளையும், மக்கும் குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் மைக்ரோ கம்போஸ்ட் மையங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மரக்கன்றுகள் நட்டார்
தொடர்ந்து, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் அடையாறு ஆற்றங்கரையில் திரு.வி.க. நகர் பாலம் முதல் கோட்டூர்புரம் பாலம் வரை மற்றும் கோட்டூர்புரம் பாலம் முதல் மறைமலை அடிகளார் மேம்பாலம் வரை இருபுறங்களிலும் ரூ.14.2 கோடி மதிப்பில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.திரு.வி.க. நகர் பாலம் முதல் எம்.ஆர்.டி.எஸ். பாலம் வரை ரூ.5.4 கோடி மதிப்பிலும், எம்.ஆர்.டி.எஸ். பாலம் முதல் கோட்டூர்புரம் பாலம் வரை ரூ.5.8 கோடி மதிப்பிலும் நடைபாதை அமைத்தல் மற்றும் மரங்கள் நடுதல் போன்ற பணிகளையும் அவர் ஆய்வு செய்து மரக்கன்றுகளையும் நட்டார்.
60 ஆயிரம் மரக்கன்றுகள்
அடையாறு ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் 2 ஆயிரத்து 350 மீட்டர் நீளத்துக்கு 60 ஆயிரம் மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டு, இதுவரை 22 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. மீதமுள்ள மரக்கன்றுகள் நடும் பணிகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு வெ.இறையன்பு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, துணை கமிஷனர்கள் டாக்டர் எஸ்.மனிஷ், டி.சினேகா, சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story