சுங்குவார்சத்திரம் அருகே வேன் கவிழ்ந்து பெண் பலி; 19 பெண்கள் படுகாயம்


சுங்குவார்சத்திரம் அருகே வேன் கவிழ்ந்து பெண் பலி; 19 பெண்கள் படுகாயம்
x
தினத்தந்தி 21 March 2022 4:07 PM IST (Updated: 21 March 2022 4:07 PM IST)
t-max-icont-min-icon

சுங்குவார்சத்திரம் அருகே வேன் கவிழ்ந்து பெண் பலியானார்.

திருவள்ளூர் மாவட்டம் தொடுகாடு ஊராட்சி நமச்சிவாயபுரத்தில் காலணி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 1000-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இவர்களை வேன் மூலம் அழைத்து வந்து மீண்டும் வீட்டுக்கு அழைத்து சென்று விடுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று அங்கு பணிபுரியும் பெண் தொழிலாளர்களை வேலை முடிந்து மாலை வீட்டுக்கு தொழிற்சாலை வேனில் ஏற்றி சென்றனர். வேனை டிரைவர் ரஞ்சித் ஓட்டி சென்றார். சுங்குவார்சத்திரத்தை அடுத்த பிச்சிவாக்கம் சோதனைச்சாவடி அருகே சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக வேனை டிரைவர் திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 20 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரக்கோணம் அடுத்த மின்னல் கிராமத்தை சேர்ந்த லட்சுமி (வயது 33) என்பவர் பலியானார்.

இந்த விபத்தில் ஜெயரஞ்சனி, கோமதி, மாலா உள்ளிட்ட 19 பேரும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story