ஆத்தூரில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
ஆத்தூரில் மது குடிக்க தாய் பணம் தராததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
ஆறுமுகநேரி:
ஆத்தூரில் மது குடிக்க தாய் பணம் தராததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மது பழக்கம்
வடக்கு ஆத்தூர் சேனையர் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் முத்து செல்வகுமார்(வயது 25). மாரியப்பன் இறந்துவிட்டார். முத்து செல்வகுமார் லாரி கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதற்காக குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உறவினர்களிடமும் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.
நேற்று முன்தினம் காலையில் முத்து செல்வக்குமாரின் சகோதரன் பாலமுருகன், தாய் மற்றும் உறவினர்களும் தங்கை திருமண விஷயமாக நெல்லைக்கு புறப்பட்டு கொண்டிருந்துள்ளனர். அப்போது தாயிடம் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். உன் தங்கை திருமண விஷயமாக செல்கிறோம், மது குடிக்க பணம் தர முடியாது என தாய் மறுத்துள்ளார். பின்னர் அவரும் உறவினர்களும் நெல்லைக்கு புறப்பட்டு சென்று விட்டனர்.
தங்கையிடம் மிரட்டல்
இந்நிலையில் வீட்டில் தங்கை மட்டும் இருந்துள்ளார். மாலையில் வீட்டிற்கு வந்த முத்து செல்வகுமார் மாடிக்கு சென்றுள்ளார். அங்கிருந்து கீழ்தளத்தில் இருந்த தங்கைக்கு செல்போனில் பேசிய அவர், மது குடிக்க உனது தாயை எனக்கு பணம் தரச்சொல். இல்லை என்றால் நான் செத்து உன் திருமணத்தை நிறுத்தி விடுவேன்’ என்று மிரட்டியுள்ளார்.
ஊருக்கு சென்றுள்ள அம்மா வரட்டும் என தங்கை கூறியுள்ளார். சுமார் ஒரு மணி நேரமாக செல்வக்குமார் மாடியில் இருந்து கீழே வராததால், அவரது தங்கை மாடிக்குச் சென்றுள்ளார்.
தூக்கு போட்டு சாவு
அப்போது மாடி அறைக்கதவு பூட்டி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், கதவை நீண்டநேரமாக தட்டியும் செல்வக்குமார் கதவை திறக்கவில்லையாம். பயந்து போன அவர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் மின்விசிறி மாட்டும் கொக்கியில் சேலையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் செல்வக்குமார் இருந்துள்ளார். அவரை தூக்கிலிருந்து இறக்கிப் பார்த்தபோது அவர் இறந்தது தெரியவந்துள்ளது. அவரது உடலை பார்த்து தங்கை கதறி அழுதுள்ளார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் சம்பவ வீட்டிக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story