கண்மாய்களில் கரம்பை மண் அள்ள அனுமதிக்க விவசாயிகள் கோரிக்கை


கண்மாய்களில் கரம்பை  மண் அள்ள அனுமதிக்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 21 March 2022 6:54 PM IST (Updated: 21 March 2022 6:54 PM IST)
t-max-icont-min-icon

விவசாய நிலங்களில் மண்வளத்தை பாதுகாக்க கண்மாய், ஊரணிகளில் கரம்பை மண் அள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் மனு கொடுத்தனர்

தூத்துக்குடி:
விவசாய நிலங்களில் மண்வளத்தை பாதுகாக்க கண்மாய், ஊரணிகளில் கரம்பை மண் அள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலையில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் வீரபத்திரன், உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ருதயஞ்ஜெய் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
கரம்பை மண்
அயன்வடமலாபுரம் கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கொடுத்த மனுவில், எட்டயபுரம் தாலுகா அயன்வடமலாபுரம் பகுதியில் பயிர் அறுவடை நடந்து வருகிறது. அறுவடை செய்யப்பட்ட பகுதிகளில் உழவு பணிகளும் நடந்து வருகின்றன. தொடர்ச்சியாக ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் மண்வளம் குறைந்து வருகிறது. இதனால் மகசூல் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டாக கரம்பை மண் அள்ள அனுமதி அளிக்கப்படவில்லை. ஆகையால் ஊரணி, கண்மாய்களில் உள்ள கரம்பை மண் அள்ளி விவசாய நிலங்களில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்’ என்று கூறி உள்ளார்.
விவசாயத்துக்கு கண்மாய்தண்ணீர்
விளாத்திகுளம் தாலுகா ராமச்சந்திராபுரம் பஞ்சாயத்து கே.சுப்பையாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் விவசாய தொழில் செய்து வருகிறோம். எங்கள் ஊரில் சுமார் 8 ஆண்டுகளாக நஞ்சை கண்மாய் மூலமாக விவசாயத்துக்கு தண்ணீர் எடுத்து மிளகாய் சாகுபடி செய்து வந்தோம். தற்போது சிலர் அந்த கண்மாயில் இருந்து தண்ணீர் எடுக்க விடாமல் தடுக்கின்றனர். இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம். ஆகையால் கண்மாயில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
டாஸ்மாக்
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் சூசைநகரை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் 40 ஆண்டுகளாக வெள்ள பாதிப்பில் வாழ்ந்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் பகுதி தாழ்வான பகுதியாக இருப்பதால் சிறிய மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்கி விடுகிறது. ஆகையால் எங்களுக்கு மாற்று இடம் மற்றும் வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும’் என்று கூறி உள்ளனர்.
முத்தையாபுரம் தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்க தலைவர் தனராஜ் தலைமையில் சங்கத்தினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டரிடம் அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், ஸ்பிக்நகர் பகுதியில் அமைந்து உள்ள டாஸ்மாக் கடை பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக அமைந்து உள்ளது. இதனால் வியாபாரிகளுக்கு அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையால் பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி மாணவிகள், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. ஆகையால் மெயின் பஜாரில் உள்ள ஸ்பிக்நகர் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.
தூத்துக்குடி ஒன்றிய மக்கள் சமூக பாதுகாப்பு சங்க தலைவர் அகஸ்டின் ஜான்ராஜா கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார்புரத்தில் 4 வழிச்சாலை அமைக்கப்படுவதற்கு முன்பு ரோட்டின் இருபுறமும் பயணிகள் நிழற்குடை இருந்தது. சாலை பணிகள் முடிக்கப்பட்ட பிறகு மீண்டும் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் மக்கள் வெயில், மழையால் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அந்தோணியார்புரத்தில் மெயின் ரோட்டின் இருபுறமும் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
சேவை
கயத்தாறு தாலுகா கீழபாறைப்பட்டியை சேர்ந்த முருகம்மாள் என்பவர் கொடுத்த மனுவில், எனது மகளை கடந்த மாதம் பிரசவத்துக்காக கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தோம். அங்கு டாக்டர் இல்லாமல் அஜாக்கிரதையாக சிகிச்சை அளிக்கப்பட்டதால் எனது மகள் மற்றும் குழந்தை இருவரும் இறந்து விட்டனர். ஆகையால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
தூத்துக்குடி மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி செயலாளர் ஜவகர் தலைமையில் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். அரசு சேவைகள் குறித்த காலத்துக்குள் கிடைத்து விடும் என்ற உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. ஆகையால் இந்த நிலையை மாற்றி விரைவான, தரமான அரசு சேவையை மக்கள் பெறுவதற்க வழி வகுக்கும் சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளனர்.

Next Story